கருணாநிதி படித்த பள்ளியில் காலை உணவுத் திட்டம்: முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்

தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வா் மு.க. ஸ்டாலி
திருக்குவளை நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்.
திருக்குவளை நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்.


தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தும் திட்டத்தை திருக்குவளையில் மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி படித்த பள்ளியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தொடங்கி வைத்தார். 

முதல்வரின் காலை உணவுத் திட்டம் 
“நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்தது. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம்.

முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்” என்று ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டப் பேரவையில் 7.5.2022 அன்று முதல்வர் விதி 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி முதல்வர் 5.9.2022 அன்று தொடங்கி வைத்து, மாணவர்களுடன் உணவருந்தினார்.

முதற்கட்டமாக, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்திட ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 மாணவர்கள், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 மாணவர்கள், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 மாணவர்கள், 237 தொலைதூர, மலைபிரதேச பள்ளிகளில் 10,161 மாணவர்கள், என மொத்தம் 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். மேலும், 28.02.2023 முதல் இத்திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டு காலை உணவுத் திட்ட செயலியின் படி 1,005 நகர்ப்புற மையங்களில் 1,12,883 குழந்தைகளும், 963 கிராமப்புற மையங்களில் 41,225 குழந்தைகளும் பயனடைந்து வருகின்றனர்.

மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறி தொடங்கி வைத்தார். 

காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள்கள்
மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் செயல்படுத்தும் முறை
பெருநகர சென்னை மாநகராட்சி, மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் ஒருங்கிணைந்த சமையற்கூடங்கள் மூலம் பள்ளி சத்துணவு மையங்களை இணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராம ஊராட்சி மற்றும் மலைப் பகுதி மையங்களில் இத்திட்டம் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி, சுய உதவிக் குழு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்
முதல்வரின் காலை உணவுத் திட்டம், பெரும்பாலான பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, மகிழ்ச்சியோடு வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை முன்பு இருந்ததைவிட அதிகரித்துள்ளது. 

இதன்அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்திட அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் 13.1.2023 அன்று பேரவையில் அறிவித்தார்.

திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ,மாணவிகளுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.

அதன் தொடர்ச்சியாக, 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ‘பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், எல்லாக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற்றிடவும் எந்தத் தியாகத்தையும் செய்திடுவோம்’ என்ற முதல்வரின் உன்னத நோக்கத்தை செயல்படுத்திட, வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த நல்ல நோக்கத்திற்கு வரும் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், ரூ.404.41 கோடி செலவில் 31,008 பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுத்திட்டத்தை விரிவுப்படுத்தி தொடங்கி வைக்கும் விதமாக திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை உணவு பரிமாறி, அவர்களுடன் கலந்துரையாடி உணவருந்தினார்.

காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு
திங்கள்கிழமை: காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா;
செவ்வாய்க்கிழமை: காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி; 
புதன்கிழமை: காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல், வெண் பொங்கல்; 
வியாழக்கிழமை: காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா;
வெள்ளிக்கிழமை: காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி, ரவை, கோதுமை ரவை, சேமியா. மேலும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் எம். செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினர் வி.பி. நாகை மாலி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாகை மாவட்டத்தில் 6 வட்டாரங்களில் 319 காலை உணவு திட்ட மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 6982 மாணவர்களும், 7172 மாணவிகளும் என மொத்தம் 14 ஆயிரத்து 154 பேர் உணவு அருந்தினர். 

அதேபோல 4 பேரூராட்சிகளில் 16 காலை உணவு திட்ட மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 513 மாணவர்களும், 511 மாணவிகளும் என மொத்தம் 1,024 பேர் உணவு அருந்தினர். 

அதேபோல 2 நகராட்சிகளில் 29 காலை உணவு திட்ட மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 1,764 மாணவர்களும் 1,011 மாணவிகளும் என மொத்தம் 1,024 பேர் உணவு அருந்தினர். இதற்காக மாவட்டம் முழுவதும் 957 பேர் சமையலர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முதல்வா் வருகையையொட்டி மண்டல ஐ.ஜி. காா்த்திகேயன் தலைமையில், தஞ்சை சரகை டிஐஜி ஜெயச்சந்திரன் மற்றும் நாகை, மயிலாடுதுறை, திருவாரூா், தஞ்சை, கரூா், பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட 7 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com