ஆவணி மூலத் திருவிழா: பிட்டுக்கு மண் சுமந்த லீலை!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள பிட்டு தோப்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆவணி மூலத் திருவிழா
மதுரை வைகையாற்றின் கரையில் அமைந்துள்ள பிட்டு தோப்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆவணி மூலத் திருவிழா

மதுரை :  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிட்டுக்கு மண் சுமந்த லீலை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் ஆவணி மூலத் திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 18ஆம் தேதி வரை சந்திரசேகர் வழிபாடு நடைபெற்றது.

இதையடுத்து, சொக்கநாதப் பெருமானின் திருவிளையாடல்களான கருங்குருவிக்கு உபதேச லீலை, நாரைக்கு முக்தி அளித்த லீலை, மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்குப் பொற்கிழி வழங்கிய லீலை, உலவாக்கோட்டை அளித்த லீலை, பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, சைவ சமய ஸ்தாபித லீலை ஆகியவை நடைபெற்றன.

 பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரர். உடன் பிரியாவிடை. (வலது) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்
 பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரர். உடன் பிரியாவிடை. (வலது) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

முக்கிய நிகழ்வான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக விழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பிட்டுக்கு மண் சுமந்த லீலை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மன் தனியாகவும், பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலிலிருந்து அதிகாலை 5.30 மணியளவில் புறப்பட்டு, சிம்மக்கல் வழியாக புட்டுத் தோப்பு மண்டபத்துக்கு எழுந்தருளினர்.

அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பிறகு, இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த வரலாறு குறித்து எடுத்துக் கூறப்பட்டன. பின்னர், சுந்தரேசுவரர் பிட்டுக்கு மண் சுமந்த கோலத்தில் எழுந்தருளினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றியும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

பிட்டுக்கு மண் சுமந்த வரலாறு : மதுரையை அரிமர்த்தன பாண்டியன் ஆட்சி செய்த போது, வைகை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. வைகை ஆற்று வெள்ளம், கரையை உடைத்துக்கொண்டு மதுரையை அழிக்கும் அபாயம் ஏற்பட்டதால், பாண்டிய மன்னன் அமைச்சர்களைக் கலந்து ஆலோசித்தான். அந்த ஆலோசனையில், வீட்டுக்கு ஒருவர் மண் சுமந்து வைகைக் கரையை வலுப்படுத்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், மதுரை நகரில் வசித்து வரும் வந்தி எனும் மூதாட்டி பிட்டு சுடும் தொழில் செய்து வந்தார். முதலில் சோமசுந்தரக் கடவுளுக்குப் பிட்டைப் படைத்துவிட்டுப் பின்னர் தான் ஏனையோருக்கு விற்பனை செய்வது இவரது வழக்கம். வைகைக் கரையை வலுப்படுத்த மன்னன் ஆணைப்படி வீட்டுக்கு ஒருவர் சென்றனர். வந்தி, தனக்கு யாரும் இல்லையே என சோமசுந்தரக் கடவுளை நினைத்து வேண்டினார். 

அடியவர்க்கு அருளும் இறைவன், வந்திக்கும் அருள் செய்ய பிட்டுக்கு மண் சுமக்கும் கூலி தொழிலாளியாய் வந்தியிடம் வந்து சேர்ந்தார். கூலியாகப் பிட்டைப் பெற்றுக் கொண்ட இறைவன், மண்வெட்டியுடன் வைகை நதிக்கு வந்தார்.

வைகைக் கரைக்கு வந்த  இறைவன், மண் சுமந்து கரையை வலுப்படுத்தாமல், நீரில் குதித்தும், மற்றவர்கள் சுமந்து வரும் மண்ணைக் கீழே தள்ளிவிட்டும், ஆடியும், பாடியும் தனது விளையாடியுள்ளார். இதைக் கவனித்த காவலர்கள் உடனடியாக மன்னனிடம் சென்று முறையிட்டனர்.

வைகை நதிக்கு வந்த மன்னன் ஆத்திரம் அடைந்து, தனது தங்கப் பிரம்பால் இறைவனின் முதுகில் ஓங்கி அடித்தான். இறைவன் மீதுபட்ட பிரம்பு அடி, மன்னன் உள்பட உலக மக்கள் அனைவரின் மீதுமாக விழுந்தது. இந்திராதி தேவர்களையும் அந்த அடியின் வலி விட்டுவைக்கவில்லை. எல்லா உயிர்களுக்கும் அந்த அடி விழுந்தது.

அதன் பிறகு மறைந்து போன இறைவன், நந்தி முதலிய கணாதிபர்களுடன் வானத்தில் தோன்றி வந்தி மூதாட்டிக்கு அருள் புரிந்து, அவளைத் தன்னோடு வானுலகம் அழைத்துச் சென்றார். சோமசுந்தரப் பெருமானின் இந்தத் திருவிளையாடலைக் கண்ட மன்னனும் மக்களும் இறைவனைத் தொழுது நின்றனர்.

ஏற்கனவே குதிரைகள் அனைத்தும் நரியாக மாறிய குற்றத்துக்கு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் மணிவாசகரை சிறையிலிருந்து மன்னர் விடுவித்தார் என்பது புராண வரலாறு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com