குறைந்துவரும் நீரா பான உற்பத்தி!

இயற்கையான முறையில் பதப்படுத்தி சேமிக்கும் தொழில்நுட்பம் இல்லாததால் நீரா பானம் உற்பத்தி தொழில் அழிந்து வருகிறது. தென்னை மரத்தில் இருந்து
குறைந்துவரும் நீரா பான உற்பத்தி!

இயற்கையான முறையில் பதப்படுத்தி சேமிக்கும் தொழில்நுட்பம் இல்லாததால் நீரா பானம் உற்பத்தி தொழில் அழிந்து வருகிறது. தென்னை மரத்தில் இருந்து இயற்கையான முறையில் நீரா பானம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பானம் முற்றிலும் ஆல்கஹால் கலப்பு இல்லாமல் உடல் சூட்டை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியது.
நொதிக்காத தன்மையுடன் இருப்பதற்காக தென்னை மரத்தில் உள்ள தென்னம் பாளையை சீவி அதில் காற்றுப்புகாத ஐஸ் பெட்டிகளை பொருத்தி நீரா பானம் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் நீரா பானம் குளிர்நிலை உள்ள பெட்டிகள் மூலம் சேமித்து வைக்கப்படும். நீரா பானத்தை மூன்று முதல் நான்கு நாட்கள் வரை மட்டுமே அதன் தன்மை மாறாமல் வைத்திருக்க முடியும்.

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தென்னை விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை விவசாயம், தென்னை சார்ந்த தொழில்கள் தவிர்க்க முடியாததாக உள்ளன. தற்போது, தேங்காய்க்கு நிலையான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
விவசாயிகள் தங்களை வாழ்வாதாரத்தை காக்க தென்னை மரத்தில் இருந்து நீரா பானம் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று நீரா பானம் இறக்க கடந்த 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதனால், தென்னை விவசாயிகள் மற்றும் மரம் ஏறும் தொழில் செய்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படும் என நம்பினர். தனிநபர்களுக்கு நீரா பானம் இறக்க அனுமதி வழங்கினால் அதில் பல்வேறு தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளதால், தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி வழங்க முடிவு எடுத்தது.
இதனடிப்படையில் தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்து குறைந்தபட்சமாக 1,000 விவசாயப் பங்குதாரர்களை கொண்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்க முன்வந்தது.
அதனடிப்படையில், கோவை மாவட்ட தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், ஆனைமலை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், சிறுவாணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், குளோபல் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கரூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், அறந்தாங்கி தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் உள்ளிட்ட 21 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த 21 தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மூலம் தினசரி 5 ஆயிரம் லிட்டம் நீரா பானம் உற்பத்தி செய்யப்பட்டது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பழமுதிர் நிலையங்கள், அரசு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், 3 நாட்களுக்கு மேல் தன்மை மாறுவதால் சந்தைப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது.
பதப்படுத்த முடியாத நிலை... தினசரி உற்பத்தி செய்யப்படும் நீரா பானத்தை 3 முதல் 4 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாத நிலை உள்ளதால், தமிழக உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்தனர். நீராவை பதப்படுத்த கேரளம் மற்றும் பல இடங்களில் செயற்கையான தொழில்நுட்பம் கையாண்டு வருகின்றனர்.
நீராவை பதப்படுத்த செயற்கையான முறையில் வேதிப்பொருட்கள் கலக்கும் வாய்ப்பு இருப்பதால் தமிழக நீரா உற்பத்தியாளர்கள் அந்த முறையைப் பின்பற்றவில்லை.
இதனால், உற்பத்தி செய்யப்படும் நீரா பானத்தை இருப்பு வைத்து சந்தைப்படுத்த முடியாமல் 10-க்கும் மேற்பட்ட நீரா உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டன.
பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே ஆனைமலை தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், குளோபல் உலக தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், அறந்தாங்கி தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், கரூர் தென்னை உற்பத்தியாளர் நிறுவனம் உட்பட ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே தற்போது நீரா உற்பத்தி செய்து வருகின்றன. இதனால், தினசரி நீரா உற்பத்தி 5 ஆயிரம் லிட்டரில் இருந்து ஆயிரம் லிட்டராக சரிந்துவிட்டது.
பிரச்னைகள்... நீரா பானத்தை சுமார் 5 டிகிரி செல்சியல் என்ற அளவில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் தன்மை மாறும். இதனால் நீரா பானத்தை ஐஸ் பெட்டிகளில் இறக்கி, குளிர்சாதனப் பெட்டிகளில் சேகரித்து இடமாற்றம் செய்து விற்பனை செய்ய வேண்டும். இதனால், நீரா பானத்தை இயற்கையான முறையில் பதப்படுத்தி சேமித்து வைப்பது உற்பத்தியாளர்களுக்கு இயலாத காரியமாக உள்ளது.
இயற்கையான முறையில் பதப்படுத்தும் தொழில்நுட்பம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதிகமாக உற்பத்தி செய்யப்படும் இடங்களில் சேமிப்பு கலன்கள் இல்லை. கரோனா காலத்தில் விற்பனை செய்ய முடியாதது போன்ற பல்வேறு பிரச்னைகள் காரணமாக இந்த தொழில் அழிந்து வருகிறது.
விவசாயிகளுக்கு லாபம் தரும் நீரா பானம்... நீரா இறக்கும் ஒரு தென்னை மரத்துக்கு ஒரு மாதத்துக்கு ரூ.400 முதல் 500 வரை வருவாய் கிடைக்கும். இதனால், சிறு, குறு விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை அனைவருக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். மேலும் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.
இது குறித்து விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் பத்மநாபன் கூறுகையில், நீரா பானம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். ஒரு தென்னை மரத்தில் இருந்து தினசரி 2 லிட்டர் முதல் மரத்தின் வளத்தை பொருத்து 3 லிட்டர் வரை நீரா பானம் கிடைக்கும். விவசாயிகளுக்கு ஒரு மரத்துக்கு ரூ.500 வரை வருவாய் கிடைக்கும். ஆனால், நீரா பானத்தை இயற்கையான முறையில் பதப்படுத்தும் தொழில்நுட்பம் இல்லாததால் பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டன.
இதில் வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு உடலுக்கு ஆரோக்கியமான மருத்துவ குணம் வாய்ந்த சத்துக்கள் இருப்பதால் நீரா பானத்தை தாய்ப்பாலுக்கு இணையாக கருதுகிறோம். ஆகவே நீரா பானத்தை இயற்கையான முறையில் பதப்படுத்தி குறைந்தது மூன்று மாதங்கள் வரையாவது சேமிக்கும் தொழில்நுட்பத்தை அரசு வழங்க வேண்டும். உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கி தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் வழங்க வேண்டும் என்றார்.
ஆனைமலை தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் தனபால் கூறுகையில், இயற்கையான முறையில் பதப்படுத்தி சேமித்துவைக்கும் தொழில்நுட்பம் இல்லை. அந்த தொழில்நுட்பத்தை அரசு விவசாயிகளுக்கு ஆய்வாளர்கள் மூலம் வழங்கவேண்டும். முக்கியமாக உணவு பாதுகாப்புத்துறை உரிமம் வழங்க வேண்டும் என்றார்.
உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் இல்லை....நீரா பானம் இறக்க தமிழக அரசு அனுமதியளித்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. நீரா பானம் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், உணவுப் பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையால் வழங்கப்படும் உரிமம் தற்போது வரை நீரா பானத்துக்கு வழங்கப்படவில்லை. பல்வேறு குளிர்பானங்களுக்கு உணவுப் பாதுகாப்பு துறை உரிமம் வழங்குகிறது.
இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படும் நீரா பானத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் வழங்காமல் இருப்பது நீரா பானம் உற்பத்தியாளர்களிடம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நீரா பானத்துக்கு இயற்கையாக பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் மூலம் அரசு வழங்குவதுடன், உணவுப் பாதுகாப்புத் துறை உரிமமும் வழங்கினால் நீரா பானம் உற்பத்தி மூலம் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.

-

ஸா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com