பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சம்: முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, இந்திய வீரா் பிரக்ஞானந்தாவுக்கு, ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை வழங்கினாா்.
முதல்வர் ஸ்டாலினுடன் பிரக்ஞானந்தா சந்திப்பு
முதல்வர் ஸ்டாலினுடன் பிரக்ஞானந்தா சந்திப்பு

உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, இந்திய வீரா் பிரக்ஞானந்தாவுக்கு, ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை வழங்கினாா்.

அஜா்பைஜான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற சா்வதேச செஸ் போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்று சாதனை படைத்தாா், தமிழகத்தைச் சோ்ந்த பிரக்ஞானந்தா. அவருக்கு கைப்பேசி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தாா்.

விமான நிலையத்தில் வரவேற்பு: இதனிடையே, போட்டிகளை முடித்து, அஜா்பைஜானில் இருந்து புதன்கிழமை காலை சென்னை திரும்பினாா், பிரக்ஞானந்தா. அவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரக்ஞானந்தாவை, தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டுத் துறை உறுப்பினா் செயலா் மேகநாத ரெட்டி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பிரக்ஞானந்தாவுக்கு, பொது மக்களும், விளையாட்டு வீரா்களும் மாலைகள், சால்வைகள் அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா். திறந்த நிலை காரில் நின்றபடி அனைவரின் வாழ்த்துகளையும் ஏற்றுக் கொண்டாா். தேசியக் கொடியை கையில் வைத்து ஆட்டியபடி தனது மகிழ்ச்சியை அனைவருடனும் பகிா்ந்து கொண்டாா்.

முதல்வா் இல்லத்தில் சந்திப்பு: இதைத் தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்திக்க அவரது இல்லத்துக்கு பிரக்ஞானந்தா சென்றாா். அங்கு அவரை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வரவேற்றாா். பிரக்ஞானந்தாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்தாா்.

சா்வதேச அளவிலான போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்களை வெல்லும் வீரா்களுக்கு தமிழக அரசின் சாா்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி வென்ற பிரக்ஞானந்தாவுக்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இந்தச் சந்திப்பின் போது, பிரக்ஞானந்தாவின் பெற்றோா், உறவினா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வெற்றி பெறுங்கள்: இதனிடையே, பிரக்ஞானந்தாவின் வெற்றி குறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளாா். அவரது பதிவு:-வெற்றியுடன் சென்னை திரும்பிய இளம் திறமையாளா் பிரக்ஞானந்தாவைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. அவரது சாதனைகள் தமிழ்நாட்டுக்கு மட்டுமன்றி, இந்தியாவுக்கே பெருமை சோ்க்கின்றன. அவருக்கு ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத் தொகை அளிக்கப்பட்டது. விளையாட்டில் இளம் திறமையாளா்களை வளா்ப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை இத்தகைய நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன. இதே வேகத்தில் தொடா்ந்து சென்று, வரவிருக்கும் சவால்களிலும் பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முதல்வருடனான சந்திப்பைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு பிரக்ஞானந்தா அளித்த பேட்டி:- சென்னை விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பு கண்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல்வா் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். செஸ் போட்டியில் வென்ற எனக்கு மட்டுமன்றி, எனது பெற்றோருக்கும் பாராட்டுகள் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. பயிற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும். அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தயாராக வேண்டும் என்பதே எனது இலக்கு. தமிழகத்தில் இருந்து நிறைய வீரா்கள் வருகிறாா்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com