தமிழகத்திற்கான காவிரி நீரை பாஜக தடுக்கிறது! காங்கிரஸ்

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை பாஜகதான் தடுக்கிறது என்றார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினரும், கோவா மாநில பொறுப்பாளருமான ப. மாணிக்கம் தாகூர்.
தமிழகத்திற்கான காவிரி நீரை பாஜக தடுக்கிறது! காங்கிரஸ்
Updated on
1 min read


தஞ்சாவூர்: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை பாஜகதான் தடுக்கிறது என்றார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினரும், கோவா மாநில பொறுப்பாளருமான ப. மாணிக்கம் தாகூர்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை காலை தெரிவித்தது:

கர்நாடக காங்கிரஸ் அரசு எப்போதுமே தமிழகத்துக்கு காவிரி நீர் தருவதில் தடையாக இருந்ததில்லை. காவிரி மேலாண்மை ஆணையம் என்ன செல்கிறதோ, அதை கர்நாடக காங்கிரஸ் அரசு செய்கிறது. ஆனால் இதற்கு பாஜக தடையாக இருக்கிறது.

கர்நாடக பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர்தான் விவசாயிகளைப் போராட்டத்துக்கு தூண்டுகின்றனர்.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் புதன்கிழமை போராட்டம் நடத்தியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை தடுப்பதற்காக அண்ணாமலையும், பசவராஜ் பொம்மையும் போடுகிற இரட்டை வேடத்தைத் தமிழக மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்.

மும்பையில் நடைபெறும் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மிகுந்த நம்பிக்கையை அளிக்கும். மக்களிடம் மோடி அரசின் மக்கள் விரோத ஆட்சியை எடுத்துக் கூறுவதே இக்கூட்டணியின் முக்கிய நோக்கம்.

எனவே பிரதமர் வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை. பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து அந்தந்த கட்சிகள் முடிவு செய்யும். காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை ராகுல் காந்தியை முன்னிறுத்திதான் தேர்தலை சந்திக்கவுள்ளது. நாங்கள் ராகுல் காந்தி பிரதமரானால் இந்தியாவுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என்பதை முன்வைத்தே வாக்கு சேகரிக்க உள்ளோம்.

மழை, வெள்ளம், வறட்சி, விபத்து, மணிப்பூர் போன்ற மனித பேரழிவுகள் என மக்களுடைய எந்த பிரச்னையாக இருந்தாலும், அந்த இடத்துக்கு மோடி செல்வதில்லை. அவர் விழாக்களுக்கு மட்டுமே செல்வார். மக்களுடைய பிரச்னைகள், கஷ்டங்ளில் பங்கு கொள்ளமாட்டார். ஆனால் ராகுல் காந்தி மக்களுடைய பிரச்னைகள், கஷ்டங்கள், துன்பங்களில் உடனிருந்து சந்திக்கக்கூடிய தலைவராக உள்ளார்.

சந்திராயன் - 3 நிலவில் தடம் பதித்தது இஸ்ரோவின் வெற்றி. இந்த அறிவியல் சார்ந்த வெற்றியை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கொண்டாடுகிறது. எனவே, விஞ்ஞானிகள் என்ன பெயர் வைக்க வேண்டும் என நினைக்கின்றனரோ, அதைத்தான் வைக்க வேண்டும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயிற்சி போன்று ஒரு நாளைக்கு 2.50 கி.மீ. மட்டுமே நடை பயணம் மேற்கொள்கிறார். அதனால் அவரது நடை பயணம் எங்கே இருக்கிறது என்பது கூட தெரியவில்லை. பாதயாத்திரை என்ற பெயரை கேவலப்படுத்துகிற பெருமை அண்ணாமலையே சாரும் என்றார் மாணிக்கம் தாகூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com