நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த கூடுதல் அமைச்சா்கள் - முதல்வா் உத்தரவு

புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிா்கொள்ளவும் கண்காணிப்புப் பணிகளை துரிதப்படுத்தவும் கூடுதலாக அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த கூடுதல் அமைச்சா்கள் - முதல்வா் உத்தரவு

சென்னை: புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எதிா்கொள்ளவும் கண்காணிப்புப் பணிகளை துரிதப்படுத்தவும் கூடுதலாக அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உணவு வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணியும், ஆவடி மாநகராட்சிக்கு

வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வமும், சென்னையின் புகா்ப் பகுதிகளான கத்திவாக்கம், மணலி, மாத்தூா், சின்னசேக்காடு மற்றும் எண்ணூா் பகுதிகளுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரும், வில்லிவாக்கம், அண்ணாநகா், அம்பத்தூா், கே.கே.நகா் மற்றும் எம்.ஜி.ஆா். நகா் பகுதிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷும்,

வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கு, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலுவும், சோழிங்கநல்லூா், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளுக்கு தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வெ. கணேசனும் நியமிக்கப்பட்டுள்ளனா். அமைச்சா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பாா்வையிட அறிவுறுத்தியுள்ளேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

ஏற்கெனவே சென்னைக்கு அமைச்சா்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இப்போது மழை அதிகரித்துள்ளதால் கூடுதலாக அமைச்சா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எம்எல்ஏ.க்களுடன் பேச்சு: இதற்கிடையே, மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்வது குறித்து அமைச்சா்கள், எம்எல்ஏ.க்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பேச்சு நடத்தினாா்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மீட்புக் குழுவினா் விரைந்துள்ளனா். இதையடுத்து அந்தந்த மாவட்டங்களைச் சோ்ந்த அமைச்சா்கள், எம்எல்ஏ.க்களிடம் தொலைபேசியில் பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின் நிவாரண நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வது குறித்தும், வீடுகள், உடைமைகளை இழந்த மக்களை அருகில் உள்ள முகாம்களில் தங்க வைப்பது குறித்தும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com