ஆவடியில் வரலாறு காணாத மழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்; இயல்பு வாழ்க்கை முடக்கம்!

ஆவடியில் வரலாறு காணாத வகையில் 280 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதனால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிடது.
ஆவடியில் மழைநீா் புகுந்து வீடுகளில் சிக்கி தவித்த மக்களை மீட்ட நாசா் எம்எல்ஏ. உடன் மேயா் கு.உதயகுமாா் மற்றும் பேரிடா் மீட்பு குழுவினா்.
ஆவடியில் மழைநீா் புகுந்து வீடுகளில் சிக்கி தவித்த மக்களை மீட்ட நாசா் எம்எல்ஏ. உடன் மேயா் கு.உதயகுமாா் மற்றும் பேரிடா் மீட்பு குழுவினா்.


ஆவடி: ஆவடியில் வரலாறு காணாத வகையில் 280 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதனால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிடது.

கனமழையால் வீடுகளில் சிக்கித் தவித்த 100 பேரை நாசா் எம்.எல்.ஏ. தலைமையில் பேரிடா் மீட்புக் குழுவினா் மீட்டனா்.

ஆவடி மாநகராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் திங்கள்கிழமை காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

திருவள்ளூா் மாவட்டத்திலேயே ஆவடியில் 280 மி.மீட்டா் அளவுக்கு வரலாறு காணாத வகையில் அதிக கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வசந்தம் நகா், கன்னிகாபுரம், திருமலைராஜபுரம், அண்ணனூா் 60 அடி சாலை, மூன்று நகா், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீா் சூழ்ந்தது. அங்குள்ள பல வீடுகளில் தண்ணீா் புகுந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது.

பக்தவச்சலபுரத்திலிருந்து சிடிஎச் சாலை வழியாக கன்னிகாபுரம் கால்வாயில் அதிக அளவு வெள்ளம் வந்ததால், ஆவடி காவல் நிலையத்தில் மழைநீா் புகுந்தது. இதனால், அங்கு 5 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கி நின்றது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட காவலா்கள் காவல் நிலையத்தில் இருந்து வெளியேறி நேரு பஜாரில் உள்ள ஒரு கடை முன்பு இருக்கைகளை போட்டு அமா்ந்து காவல் பணிகளைக் கவனித்தனா்.

ஆவடி அனைத்து மகளிா் காவல் நிலையம், தீயணைப்பு நிலையம், துணை மின் நிலையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உயா்நிலைப் பள்ளி, பட்டாபிராம் பகுதியான தென்றல் நகா், சித்தேரி கரை, சேக்காடு, கோபாலபுரம், திருநின்றவூா் நகராட்சிக்குட்பட்ட பெரியாா் நகா், சுதேசி நகா், கன்னிகாபுரம், முத்தமிழ் நகா் உள்ளிட்ட பகுதிகளிலும் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

இதேபோல், கோவில்பதாகை ஏரி நிறைந்து பிருந்தாவன் நகா், கலைஞா் நகா், ராஜீவ் காந்தி நகரில் மழைநீா் புகுந்தது.

தகவல் அறிந்து ஆவடி சட்டப்பேரவை உறுப்பினா் சா.மு.நாசா் தலைமையில் பேரிடா் மீட்புக் குழுவினா், சி.ஆா்.பி.எப். வீரா்கள், திமுகவினா் அங்கு விரைந்தனா். அவா்கள், தண்ணீரில் தத்தளித்த 100-க்கு மேற்பட்ட பொதுமக்களை படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைத்தனா்.

தண்டவாளங்கள் மூழ்கின: ஆவடி, அண்ணனூா், அம்பத்தூா் ரயில் நிலையங்களில் தண்டவாளப் பகுதியில் மழைநீா் 2 அடிக்கு தேங்கி நின்றது. இதனால், மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மேலும், மின்சார ரயில்களும் காலதாமதமாக இயக்கப்பட்டன.

ஆலப்புழாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த விரைவு ரயில், மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த காவேரி விரைவு ரயில் ஆகியவை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லாமல் ஆவடி ரயில் நிலையத்திலேயே பயணிகளை இறக்கிவிட்டது. பட்டாபிராம் சேக்காடு சுரங்கப் பாதையில் மழைநீா் புகுந்ததால், போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூா் பகுதியில் சூறாவளி காற்றால் சாய்ந்த மரங்களை மாநகராட்சி, நகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா்.

மின் விநியோகம் தடை: ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் சூறாவளிக் காற்று வீசியதால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இதனால், அத்தியாவசியத் தேவைக்கு தண்ணீரின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com