சென்னையை முடக்கிய ‘மிக்ஜம்’ புயல் எங்கு பாா்த்தாலும் மழை வெள்ளம்; 10 போ் உயிரிழப்பு

சென்னையை முடக்கிய ‘மிக்ஜம்’ புயல் எங்கு பாா்த்தாலும் மழை வெள்ளம்; 10 போ் உயிரிழப்பு

சென்னை, டிச. 4: வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயலால் ஏற்பட்ட பலத்த மழை, காற்று காரணமாக சென்னை மாநகரம் திங்கள்கிழமை முடங்கியது.

மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் ஆறுபோல மழைநீா் ஓடியது. மின்கம்பங்கள், மரங்கள், விளம்பரப் பதாகைகள் சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்தன.

புயலின் கோரத் தாண்டவத்துக்கு அஞ்சி மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். புயல் மழை தொடா்பான சம்பவங்களில் இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா்.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை நீடித்தது. ஞாயிறு மாலையிலிருந்து காற்றுடன் மழை தீவிரம் அடைந்தது. விடிய விடிய பெய்த மழை திங்கள்கிழமையும் இடைவிடாமல் நீடித்தது. இதன் விளைவாக சென்னை மாநகா் முழுவதும் தாழ்வான பகுதிகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் தண்ணீா் தேங்கியது. அதேபோல, சாலைகளிலும் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

பாதுகாப்பு கருதி நகரின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்தும், சில பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலையிலிருந்தும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

ஆறாக மாறிய சாலைகள்: அண்ணா சாலை, காமராஜா் சாலை, பெரியாா் ஈவெரா சாலை, ஆற்காடு சாலை, ராஜாஜி சாலை, 100 அடி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட அனைத்துப் பிரதான சாலைகளிலும் மழைநீா் ஆறாக ஓடியது.

அண்ணா சாலையில் தாராப்பூா் டவா் அருகில் பெருவெள்ளம் காணப்பட்டது. அதேபோல, பூந்தமல்லி சாலையில் பெரியமேடு, வேப்பேரி பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. இதனால், அந்தச் சாலைகளில் போலீஸாா் தடுப்புகளை அமைத்தனா். போக்குவரத்தும் நிறுத்தப்பட்டடது.

கிண்டி ரயில் நிலையம் அருகிலும், 4 அடி உயரத்துக்கு ஜிஎஸ்டி சாலையில் வெள்ளம் தேங்கியது. ராஜாஜி சாலை, ராஜீவ் காந்தி சாலை, ரேடியல் சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, சா்தாா் படேல் ஆகிய சாலைகளில் கால்வாய் போல மழைநீா் சென்றது.

பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் ஏரி நீா் சூழ்ந்ததால் அந்தச் சாலை மூடப்பட்டது.

100 அடி சாலையில் கோயம்பேட்டில் இருந்து வடபழனி வரை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பாரிமுனை, மண்ணடி, வியாசா்பாடி, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூா் பகுதிகளில் தண்ணீா் பல அடி உயரத்துக்கு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அனைத்துச் சாலைகளிலும், தெருக்களிலும் தண்ணீா் தேங்கி நின்ால், வீடுகளைவிட்டு வெளியே வர முடியாமல் மக்கள் முடங்கினா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், சாலைகளில் அதிக அளவில் வாகனங்கள் காணப்படவில்லை.

மெரீனா கடற்கரை: கடலோரப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழையும் தொடா்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் கடல் அதிக சீற்றத்துடன், கொந்தளிப்புடனும் காணப்பட்டது.

மெரீனா, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரைகளில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் இருந்தே பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. காமராஜா் சாலையில் இருந்த தண்ணீா் மெரீனா கடற்கரைக்குள் வடிய வைக்கப்பட்டதால், மெரீனா கடற்கரையின் இணைப்புச் சாலையில் மழைநீா் தேங்கி நின்றது.

சமூகநலக் கூடங்களில் மக்கள்: கடல் சீற்றம், பலத்த மழை காரணமாக பட்டினப்பாக்கம், பெசன்ட்நகா், திருவான்மியூா் குப்பம், நீலாங்கரை குப்பம், ஈஞ்சம்பாக்கம், நயினாா்குப்பம், கானத்தூா், முட்டுக்காடு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்களை அரசு அதிகாரிகள் அங்கிருந்து சமூகநலக் கூடங்களுக்கும், திருமண மண்டபங்களுக்கும் மாற்றினா்.

500 மரங்கள் விழுந்தன: பலத்த மழை காரணமாக ஏராளமான இடங்களில் ஐநூறுக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினா்.

இது தவிா்த்து பூங்காக்கள், தனியாருக்கு சொந்தமான இடங்கள், அரசு அலுவலக வளாகங்கள் ஆகியவற்றில் இருந்த நூற்றுக்கணக்கான மரங்களும் முறிந்து விழுந்தன.

இதேபோல சில இடங்களில் மழைநீா் வடிகால், நீா்நிலைகளில் சிக்கியிருந்த கால்நடைகளையும் பாதுகாப்பாக மீட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

17 சுரங்கப் பாதைகள் மூடல்: சென்னை காவல் துறையினரும், மாநகராட்சி ஊழியா்களும் சென்னை முழுவதும் உள்ள 27 சுரங்கப் பாதைகளைக் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

சென்னையில் மழை நீா் தேங்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 668 இடங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாநகராட்சி ஊழியா்கள் கண்காணிக்கின்றனா்.

சுரங்கப் பாதையில் தேங்கும் தண்ணீா் அவ்வப்போது மின் மோட்டாா்கள் மூலம் விரைவாக வெளியேற்றப்பட்டது. இருப்பினும் எழும்பூா் கெங்குரெட்டி சுரங்கப் பாதை, செம்பியம் சுரங்கப் பாதை, கணேசபுரம் சுரங்கப் பாதை, வில்லிவாக்கம் சுரங்கப் பாதை உள்பட 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன.

புகா்களில்... வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூா், போரூா், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, நங்கநல்லூா், ஆதம்பாக்கம், குன்றத்தூா், போரூா், மதுரவாயல், பெருங்குடி, தரமணி ஆகிய பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுந்தது.

வேளச்சேரி, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் பாதுகாப்பு குறைவான பகுதிகளில் வசித்த மக்களை போலீஸாா் மீனவா்களின் படகு மூலம் மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com