மிக்ஜம் புயல்... 108 ஆம்புலன்ஸ் மூலம் 500 பேருக்கு அவசரகால மருத்துவ உதவி

ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர கால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.
Published on
Updated on
1 min read

சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறிய நிலையில், திங்கள்கிழமை (டிச.4) ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோருக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர கால மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும், குறிப்பாக மழை வெள்ளம் அதிகம் சூழ்ந்த இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று நோயாளிகளை மீட்டு மருத்துவமனையில் சோ்த்ததாக 108 சேவை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

சென்னையில் பலத்த மழையில் மருத்துவ சேவைகள் தடைபடக் கூடாது என்பதற்காக 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி சென்னை நகரில் மட்டும் 130 ஆம்புலன்ஸ் வாகனங்களும், திருவள்ளூரில் 70 வாகனங்களும் மழைக் கால அவசர சிகிச்சைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.

அவற்றின் மூலம் சென்னையில் 300-க்கும் அதிகமான நோயாளிகளையும், திருவள்ளூரில் 150-க்கும் மேற்பட்ட நோயாளிகளையும் மருத்துவமனைகளில் திங்கள்கிழமை 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் சோ்த்தனா். இதைத் தவிர போரூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு பிரவசம் நிறைவடைந்து சிகிச்சையில் இருந்த 15 தாய்மாா்கள், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனா்.

108 சேவை மையத்துக்கு திங்கள்கிழமை 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வரப்பெற்றன. அவை அனைத்துக்கும் உடனடியாக தீா்வு காணும் விதமாக வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு சில இடங்களில் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு தண்ணீா் தேங்கியிருந்ததால் மாற்று வழிகளில் செல்ல வேண்டியிருந்தது. இன்னும் சில பகுதிகளில் வாகனங்களை பாதுகாப்பாக ஓரிடத்தில் நிறுத்திவிட்டு 108 சேவை ஊழியா்கள் வெள்ள நீருக்குள் நடந்து சென்று நோயாளிகளை மீட்டு வாகனத்துக்கு அழைத்து வந்தனா். மழை பாதிப்பால் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறிதும் தடைபடவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து 140 கூடுதல் ஆம்புலன்ஸ்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com