உச்ச நீதிமன்றத்தின் 370 நீக்கம் பாஜகவின் அரசியல் சூதாட்டம்: கருணாஸ் கண்டனம்

காஷ்மீர் மக்களின் அரசியல் சுயநிர்ணய தன்னாட்சி அதிகாரம் மீண்டும் அவர்களது கைகளில் கிடைக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் அங்கே மக்கள் போர்களம் காண்பார்கள்
உச்ச நீதிமன்றத்தின் 370 நீக்கம் பாஜகவின் அரசியல் சூதாட்டம்: கருணாஸ் கண்டனம்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 தற்காலிகமானதே என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு  இன்று (11.12.2023) தீர்ப்பை வழங்கியுள்ளது. இது காஷ்மீர் மக்களின் தன்னாட்சி இறையாண்மையின் கழுத்தை நெறிக்கும் தீர்ப்பு என்று நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், முன்னாள் சடடப்பேரவை உறுப்பிநருமான கருணாஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது என்றும், சட்டப்பிரிவு 1 மற்றும் 370ன் படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சட்டப்பிரிவு 370 ஏற்படுத்தப்பட்டது ஒரு இடைக்கால ஏற்பாடு என்றும், சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதற்கு இந்திய குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்றும். ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு அது தனித்த இறையாண்மையைக் கொண்டிருக்கவில்லை என்றெல்லாம், ஒரு சட்ட வரலாற்றை மறைத்து பாஜகவின் அசல் முகமாக நின்று உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.

அது மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்றும், மாநிலம் தொடர்பாக மத்திய அரசு எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யக் கோர முடியாது என்றும், அந்த வகையில், லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும். அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக தலைமைச் செயற்குழு கூட்டம்  எடுக்கும் முடிவை ஒப்புவிக்கும் விதமாக இந்தத் தீர்ப்பு இருக்கிறது.

காஷ்மீர் மீதான பாஜகவின் திட்டத்திற்கு நீண்ட காலமாகவே தடையாக இருந்தது சட்டப்பிரிவு 370 தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை நீக்குவோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கைகளில் தொடர்ச்சியாக கூறி வந்தது. அதை இப்போது உச்ச நீதிமன்றம் செய்துள்ளது.

அன்றும், இன்றும் காஷ்மீர் மக்களின் ஜனநாயகக் குரல்களாக விளங்கும் தலைவர்களை எல்லாம் வீட்டுச்சிறையில் வைத்துவிட்டு, அங்கே ராணுவத்தைத் குவித்து அந்த மண்ணின் மக்களைத் திறந்தவெளி சிறையில் வைத்துவிட்டு, அங்கே ராணுவத்தை குவித்து மக்களைத் திறந்தவெளி சிறையில் வைத்து மனித உரிமைக்கு எதிரான எல்லா அட்டூழியங்களையும் அரங்கேற்றிவிட்டு 370 ஐ தந்து விடுதலை கொடுத்துவிட்டோம் என்று சொல்வதும், பிறகு தமது அரசியல் நோக்கங்களுக்காக 370 ஐ திரும்பப் பிடிங்கிக் கொள்வதும், அரசியல் ஏமாற்று வேலை மட்டுமல்ல, அப்பட்டமான மக்கள் ஜனநாயக மோசடியாகும். 

370, 35ஏ சிறப்புச் சட்டங்கள் காஷ்மீர் மக்களுக்கு இந்தியா போடுகிற பிச்சையல்ல. அது அவர்களது அரசியல் உரிமை என்பது இந்திய அரசியல்வாதிகளும், இந்திய அரசியல் சட்ட வல்லுநர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, நீக்கப்பட்ட 370 ஐ மீண்டும் நிரந்தரமாக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் அரசியல் சுயநிர்ணய தன்னாட்சி அதிகாரம் மீண்டும் அவர்களது கைகளில் கிடைக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் அங்கே மக்கள் போர்களம் காண்பார்கள் என்பதை இந்திய அரசு உணரவேண்டுமென்று கருணாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com