யார், யாருக்கு வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம்? அரசாணை வெளியீடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவது குறித்து தமிழக அரசின் அரசாணை வெளியாகியிருக்கிறது.
யார், யாருக்கு வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம்? அரசாணை வெளியீடு
Published on
Updated on
2 min read


சென்னை: மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுவது குறித்து தமிழக அரசின் அரசாணை வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் டிசம்பர் 3, 4ஆம் தேதிகளில் வீசிய மிக்ஜம் புயல் மற்றும் அதன் காரணமாக சென்னையில் அதிகனமழை பெய்தது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சில வட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் மக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், மிக்ஜம் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

நிவாரண உதவித் தொகை வழங்குவது குறித்து தமிழக அரசு இன்று அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, துணிகள், பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருள்களை இழந்தவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும் என்றும், வீடுகளுக்குள் இரண்டு நாள்கள் வெள்ளம் தேங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அரசாணையின்படி, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வட்டங்களில் வசிப்பவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும், 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் வசிப்பவர்களுக்கு முழுமையாக நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கும்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்போரூர் வட்டத்தில் மூன்று வருவாய் கிராமங்களுக்கும்,

திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு வட்டங்களில் வசிப்போருக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்த புயல் மற்றும் அதிகனமழை காரணமாக சில பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் இயங்காததாலும், பயனாளர்களின் வங்கிக் கணக்கு எண்களை சேகரித்து நிவாரணம் வழங்க காலதாமதம் ஆகும் என்பதாலும் ரொக்கமாக வழங்கப்படுவதாகவும்,

மேலும், பாதிக்கப்பட்ட பலர் தங்களது ஏடிஎம் அட்டை, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை இழந்திருக்கக் கூடும் என்பதாலும், அவர்களுக்கு உடனடியாக பயனளிக்கும் வகையில் நிவாரணத் தொகை ரொக்கமாக வழங்கலாம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலமாக ரொக்கமாக வழங்கப்படலாம் என்றும், நெரிசலைக் குறைக்கும் வகையில் டோக்கன்களை முன்னதாகவே கூட்டுறவுத் துறை மூலம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சர்க்கரை அட்டை மற்றும் வரி செலுத்துவோர், அரசுப் பணியில் இருப்போர், தங்களின் பாதிப்பு விவரங்களையும், வங்கி கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து நிவாரணத் தொகையின் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com