பூந்தமல்லியில் குடிசை வீடுகளுக்குள் சென்று மத்திய குழுவினர் ஆய்வு

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பூந்தமல்லியில் குடிசை வீடுகளுக்குள் சென்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
பூந்தமல்லியில் குடிசை வீடுகளுக்குள் சென்று மத்திய குழுவினர் ஆய்வு

பூந்தமல்லி: மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பூந்தமல்லியில் குடிசை வீடுகளுக்குள் சென்று மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது குடிசை வீடுகளுக்கு முழு நிவாரணத் தொகை கிடைக்க பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர்.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யாா்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்தியக் குழுவினர், விமானம் மூலம் திங்கள்கிழமை இரவு  சென்னை வந்தடைந்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த இரு நாள்களாக 4 மாவட்டங்களிலும் மத்தியக் குழு ஆய்வு செய்தது. 

இரு குழுக்களாகப் பிரிந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர். 

பூந்தமல்லி நகராட்சிக்கு உள்பட்ட அம்மான் நகர் பகுதியில் வியாழக்கிழமை மத்திய ஆய்வு குழு தலைவர் குணால் சத்யார்த்தி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு அந்த பகுதியில் இருந்த குடிசை வீடுகளுக்குள் சென்று வீட்டில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

அந்த பகுதி பெண்கள் பாதிப்பு குறித்து தமிழில் கூறியவுடன் அங்கிருந்த அதிகாரிகள் அவருக்கு இந்தியில் மொழி மாற்றம் செய்து விளக்கி கூறினார்கள். மேலும் இதுபோன்ற குடிசை வீடுகளை பார்ப்பதற்கு கடினமாக இருப்பதாகவும், குடிசை வீடுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் முழு நிவாரணத் தொகையும் கிடைக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்துவிட்டு சென்றார்.மத்திய குழுவினர் அந்த பகுதியில் இருந்த ஒவ்வொரு குடிசை வீட்டுக்கும் சென்று ஆய்வு செய்தது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com