சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் திங்கள்கிழமை (டிச.18) கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச.26-ஆம் தேதி தேர் திருவிழாவும், டிச.27-ஆம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சன தரிசனமும் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி, நிகழாண்டுக்கான மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் திங்கள்கிழமை (டிச.18) காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் ஏ.மீனாட்சிநாத தீட்சிதர் பொசுக் கொடியை ஏற்றி கொடியேற்றி வைத்தார்.பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். உற்சவத்தை தொடர்ந்து 10 நாள்கஞம் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.
டிச.26- ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. டிச.27 -ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. டிச.28-ஆம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
விழா ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் குழு செயலா் டி.எஸ்.சிவராம தீட்சிதா், துணைச் செயலா் க.சி.சிவசங்கர தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா். உற்சவ 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது.