ரூ.6 ஆயிரத்துக்கான டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!

தமிழகத்தில் சென்னையில் முழுமையாகவும், திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.6 ஆயிரத்துக்கான டோக்கன் கிடைக்கவில்லையா? காரணம் இதுதான்!


சென்னை: தமிழகத்தில் சென்னையில் முழுமையாகவும், திருவள்ளூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த வார இறுதியில், அந்தந்தப் பகுதிகளில் ரூ.6 ஆயிரத்துக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல், பயனாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

நியாயவிலைக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ரூ.6 ஆயிரம் பெற்று வருகிறார்கள். பல நியாயவிலைக் கடைகளில் மாலையிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில், சிலருக்கு மட்டும் இந்த நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு, அதனை பூர்த்திசெய்து அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அவ்வாறு, டோக்கன் வழங்கப்படாததற்கான காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது, தமிழகத்தில் 2.24 கோடி குடும்ப அட்டையில் வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே சர்க்கரை அட்டை வைத்திருக்கிறார்கள். பொங்கல் பரிசு, நிவாரணத்தொகை காரணமாக, வசதி படைத்தவர்களும் அரிசி அட்டையே வைத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில்தான், மிக்ஜம் புயல் காரணமாக நான்கு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

எனவே, இந்த அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போரில், அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோரை தவிர்த்து நிவாரணப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பட்டியலில், தமிழக நிதித் துறை, மின் ஆளுமை முகமை வாயிலாக, இன்டகிரேட்டடு பைனான்சியல் அண்டு ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட் எனும் மென்பொருள் மூலம், குடும்ப அட்டையில் இருப்போரின் விவரங்களை, அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் என பட்டியலோடு ஒப்பிட்டுள்ளது.

இது தவிர, வருமான வரி செலுத்துவோரின் விவரங்களையும் தனியே பிரித்தெடுத்துவிட்டது.

மேலும், கார் உள்ளிட்ட வாகனங்கள் வாங்கும்போது, வாகனப் பதிவுக்கு வழங்கிய ஆதார் எண் வாயிலாக, கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருப்போரின் விவரங்களம் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ஆதார் எண் வாயிலாக பல்வேறு குடும்ப அட்டைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுத்தான் நிவாரண தொகை பெறுவோருக்கான பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. 

எனவே, வருமான வரி செலுத்துவோர், குடும்பத் தலைவர் பெயரில் கார் வைத்திருப்பவர்கள், அரசு, மத்திய அரசு நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு நிவாரண தொகை வழங்க தேர்வு செய்யப்படவில்லை.

ஆனாலும், அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், விண்ணப்பம் அளிக்கப்பட்டு, அதில் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை வங்கி எண் உள்ளிட்ட விவரங்களுடன் இணைத்து நியாயவிலைக் கடைகளில் வழங்கினால், பரிசீலனை செய்யப்பட்டு நிவாரண உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com