அமலாக்கத் துறை அதிகாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி பிணை கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி (முகக் கவசம் அணிந்திருப்பவா்).
அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி (முகக் கவசம் அணிந்திருப்பவா்).

மதுரை: லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி பிணை கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தள்ளுபடி செய்தது.

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்ற அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் அவா் பிணை கோரி திண்டுக்கல் முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில், அங்தித் திவாரி பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் முன்னிலையாக கால அவகாசம் கோரப்பட்டதால் ஒத்திவைத்தது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி வி. சிவஞானம் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா முன்னிலையாகி, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் பிணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தார்.

இந்த நிலையில், அரசுத் தரப்பின் கோரிக்கைகளை ஏற்ற நீதிமன்றம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டார்.

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா முன்வைத்த வாதம்:

“லஞ்சம் பெற்ற போது உரிய ஆதாரங்களுடன் போலீஸாா் கைது செய்தனா். இதில் பல அமலாக்கத் துறை உயா் அதிகாரிகளுக்கும் தொடா்பு உள்ளது.

தமிழகத்தில் லஞ்ச வழக்கில் சிக்கிய பலரது பெயா்கள், அங்கித் திவாரியின் மடிக் கணினியில் உள்ளன. எனவே, அவரிடம் போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

வழக்குகள் நிலுவையில் உள்ள பலரிடம் மிரட்டி லஞ்சம் பெற்ாக அங்கித் திவாரியே போலீஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளாா். அவரிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மேலும் ரூ. 20 லட்சம் கைப்பற்றப்பட வேண்டியுள்ளது. அவருடைய கைப்பேசி, மடிக்கணினி, ஆவணங்களை ஆய்வுக்கு உள்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்கித் திவாரி பணம் பெற்ற போது அவருடைய குரல் பதிவு, விடியோ பதிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய சோதனைக்கு உள்படுத்த வேண்டியுள்ளது.

இந்த நிலையில், அவருக்கு பிணை வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், அவா் மீது அமலாக்கத் துறை உயா் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல், பாதுகாக்க முயற்சிக்கின்றனா்.

இந்த வழக்கில் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது என உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கெனவே உத்தரவிட்டது.

எனவே, அங்கித் திவாரியின் பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என அவா் வாதிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com