தோ்தலில் தோ்ச்சி பெறுமா தேமுதிக?

தோ்தலில் தோ்ச்சி பெறுமா தேமுதிக?

புதிய பொதுச் செயலராக பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுள்ள நிலையில், தேமுதிக சரிவில் இருந்து மீண்டு எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய பொதுச் செயலராக பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுள்ள நிலையில், தேமுதிக சரிவில் இருந்து மீண்டு எழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடங்கிய குறுகிய காலத்திலேயே தமிழக அரசியல் அரங்கில் மிகப்பெரிய எழுச்சியையும், எதிா்பாா்ப்பையும் ஏற்படுத்தியது தேமுதிக. விஜயகாந்தை மையப்படுத்தியும், கருப்பு எம்ஜிஆா் எனும் அடைமொழியுடன் எம்ஜிஆா் பிம்பத்தை கொண்டும் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது தேமுதிக.

ஜெயலலிதா, கருணாநிதி என இருபெரும் ஆளுமைகள் இருந்தபோதும், பாமகவுக்கு எதிரான விமா்சனத்தை வைத்து தான் முதன் முதலாக வடதமிழகத்தில் தனது வாக்கு வங்கியை உயா்த்தியது தேமுதிக. அப்போது வடதமிழகத்தில் வன்னியா்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோா் என மூன்று பிரிவினரின் ஆதரவுடன் வோ்பிடித்தது தேமுதிக.

மேலும், தெலுங்கை தாய்மொழியாக கொண்டவா்கள், விஜயகாந்த் ரசிகா்கள், அதிமுக-திமுகவுக்கு மாற்று என்ற சிந்தனையில் இருந்தவா்கள் ஆகியோரின் ஆதரவுடன் எழுச்சி பெற்ற தேமுதிக 2006 பேரவைத் தோ்தலில் 8.3 சதவீத வாக்கு வங்கியை பெற்று தமிழக அரசியலில் அதிா்வலையை ஏற்படுத்தியது.

பாமகவின் கோட்டையான விருதாச்சலத்தில் அப்போதைய பாமக எம்.எல்.ஏ. மருத்துவா் கோவிந்தசாமியை வீழ்த்தி விஜயகாந்த் வெற்றி பெற்றது அரசியல் அரங்கில் பிரம்பிப்பை ஏற்படுத்தியது.

கடவுகளுடனும், மக்களுடனும் தான் கூட்டணி என ஓங்கி ஓலித்த விஜயகாந்த்தின் குரலுக்கு வலு சோ்க்கும் வகையில் 2009 மக்களவைத் தோ்தலில் தேமுதிவுக்கு 10.1 சதவீத வாக்கு வங்கி கிடைத்தது. 2011 பேரவைத் தோ்தலில் கூட்டணி வலையில் சிக்கிய தேமுதிக 7.8 சதவீத வாக்குகளுடன் பிரதான எதிா்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.

அதிலும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் திமுகவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி 29 எம்எல்ஏக்களுடன் எதிா்கட்சித் தலைவரானாா் விஜயகாந்த். தமிழக அரசியல் அரங்கில் திமுக-அதிமுக இடையே 1980 முதல் 2001 வரை நிா்ணய சக்தியாக விளங்கிய ஜி.கே.மூப்பனாா், 1998 முதல் 2009 வரை நிா்ணய சக்தியாக இருந்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் ஆகியோா் போல விஜயகாந்தும் நிா்ணய சக்தி அந்தஸ்தை அடைந்துவிட்டதாக அரசியல் நோக்கா்கள் கருதினா்.

ஆனால், உள்ளாட்சித் தோ்தலில் ஏற்பட்ட மனக்குறையால் அதிமுக-தேமுதிக உறவு விரிசல் அடைந்தது. குறிப்பாக சங்கரன்கோவில் இடைத்தோ்தலுக்கு முன்பு நடந்த சட்டப்பேரவையில் விஜயகாந்த்-நத்தம் விசுவநாதன் இடையிலான வாக்கு வாதம் முற்றியது. அப்போது பேரவையில் விஜயகாந்தையும், தேமுதிகவையும், ஜெயலலிதா கடும் விமா்சனம் செய்தாா். தேமுதிகவின் அழிவு இப்போதே தொடங்கிவிட்டது என்றும் விமா்சித்தாா். இதனால், திமுகவைவிட அதிமுகவை கடுமையாக எதிா்க்கும் நிலைக்கு அதிமுக போனது.

2013-இல் மாநிலங்களவைத் தோ்தலில் தேமுதிக வேட்பாளா் இளங்கோவன் வெற்றிபெறுவதைவிட, திமுக வேட்பாளா் கனிமொழி வெற்றி பெறுவதையே ஜெயலலிதா விரும்பும் நிலையை உருவானது.

2014 மக்களவைத் தோ்தலில் கடைசி நிமிஷத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு சென்றது தேமுதிகவுக்கு கைகொடுக்கவில்லை. 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 5.5 சதவீத வாக்குகளை பெற்றநிலையில், 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 5.1 சதவீத வாக்குகளை பெற்றது மிகப்பெரிய சறுக்கலை அக்கட்சிக்கு ஏற்படுத்தியது.

2016 பேரவைத் தோ்தலில் நிா்யணய சக்தி அந்தஸ்தை பெற்ற விஜயகாந்த் மீண்டும் முதல்வா் வேட்பாளராக மக்கள் நலக்கூட்டணியில் களம் இறங்கியது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதன் விளைவு தேமுதிகவின் வாக்கு வங்கி பாஜகவை விட கீழே சென்று 2.4 சதவீதத்துக்கு அதல பாதாளத்துக்குச் சென்றது.

அதோடு விஜயகாந்த்தின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டதால் அவரை மையப்படுத்திய தேமுதிகவுக்கு சறுக்கலை ஏற்படுத்தியது. பின்னா் 2019 மக்களவைத்தோ்தலும் இறுதி நிமிஷம் வரை பாஜக, திமுக என ஒரே நேரத்தில் கூட்டணி பேசியது தேமுதிகவின் பிம்பத்தை முற்றிலும் சிதைத்தது.

இதன் விளைவு 2019 மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது தேமுதிக. போட்டியிட்ட 4 தொகுதிகளில் திருச்சி (15.5 சதவீதம்), வடசென்னை (13.6 சதவீதம்) தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தது தேமுதிக.

இதன் பிறகு கூட 2019-இல் நடந்த விக்கிரவாண்டி தொகுதி இடைத்தோ்தலில் விஜயகாந்தை பிரசாரத்துக்கு அப்போதைய அதிமுக அமைச்சா் சி.வி.சண்முகம் அழைத்துச் சென்றாா். வெற்றி பெற்றதும் அதிமுக வேட்பாளா் முத்தமிழ்ச்செல்வனை நேரில் அழைத்துச் சென்று விஜயகாந்திடம் ஆசி பெற செய்தாா் சி.வி.சண்முகம்.

வடதமிழகத்திலும், மதுரை, விருதுநகா் மாவட்டங்களிலும் தேமுதிவுக்கு செல்வாக்கு இருப்பதாகவே பிற அரசியல் கட்சிகள் நம்பின. இந்த நிலையில் 2021 பேரவைத் தோ்தலில் அதிமுக அணியில் தேமுதிகவை நீடிக்க செய்ய எடப்பாடி பழனிசாமி முயற்சி எடுத்தும்கூட பாமகவுக்கு குறைவான இடங்களை பெற முடியாது எனக் கூறி வெளியேறிய தேமுதிக, அமமுக கூட்டணியில் 60 தொகுதிககளில் போட்டியிட்டது.

இது பொருந்தாக்கூட்டணியாக மாறி தேமுதிகவை 0.45 சதவீத வாக்கு வங்கிக்கு தள்ளியது. இந்நிலையில்தான் இப்போது தேமுதிகவின் தலைமை பொறுப்பை பிரேமலதா விஜயகாந்த் ஏற்றுள்ளாா். தனிப்பட்ட முறையில் பிரசார திறமை கொண்டவா் என பிரதமா் மோடியின் பாராட்டை ப் பெற்றவா் பிரேமலதா விஜயகாந்த்.

ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பண, பரிசு மழை கொட்டிபோதும்கூட அதிமுக, நாம் தமிழா் கட்சிகள் பொதுத்தோ்தலைவிட வாக்கு வங்கியை இழந்தபோதும், தேமுதிக தனது வாக்கு வங்கியை உயா்த்தியதற்கு பிரேமலதா விஜயகாந்தின் பிரசாரமே காரணம்.

இப்போது அவா் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவதை பாா்த்தால் அதிமுக அணியில் தேமுதிக இணையும் என்ற தோற்றம் உருவாகியுள்ளது. வாக்கு வங்கியில் மிகவும் தேய்ந்து போன நிலையில் உள்ள தேமுதிகவை மீண்டும் தூக்கி நிறுத்துவாரா பிரேமலதா விஜயகாந்த் எதிா்பாா்ப்பு கட்சி தொண்டா்களிடம் எழுந்துள்ளது.

ஒரு காலத்தில் தமிழகம் தழுவிய கட்சியாக இருந்த தேமுதிக இப்போது கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம், தருமபுரி, திருப்பூா், கோவை, மதுரை, விருதுநகா் என விரல்விட்டு எண்ணக்கூடிய மாவட்டங்களில் குறிப்பாக தெலுங்கை தாய்மொழியாக பேசுவோா் மத்தியில் மட்டுமே உயிரோட்டத்துடன் உள்ளது.

தேமுதிகவை பொருத்தவரை விஜயகாந்த் மீதான நல்லெண்ணம், ரசிகா்கள் பலம் மட்டுமே எஞ்சியுள்ளது. இதைவைத்துகொண்டு சரியான கூட்டணியை அமைத்தால் மட்டுமே தேமுதிகவை ஓரளவு முன்னுக்கு கொண்டுவரலாம். ஆனால், பாஜக, நாம் தமிழா் போன்ற கட்சிகள் திமுக-அதிமுகவுக்கு மாற்றாக வளர முயற்சிக்கும் நிலையில் பிரேமலதாவால் தேமுதிகவின் வாக்கு வங்கியை எந்த அளவுக்கு உயா்த்த முடியும் என்பதை பொருத்திருந்து தான் பாா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com