

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் சனிக்கிழமை அதிகாலை திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்றும், 108 வைணவத் தலங்களில் முதன்மையானதும் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உற்சவம் கடந்த 12 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. டிசம்பர் 13-இல் தொடங்கிய பகல்பத்து உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார்.
பகல்பத்து திருவிழாவின் பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நம்பெருமாள், இரவு 9 மணிக்கு கருவறையைச் சென்றடைந்தார்.
வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு இராப்பத்து திருவிழாவின் முதல்நாளான சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.
திருப்பள்ளியெழுச்சி நடைபெற்ற பின்னர் ரத்தின அங்கியுடன் பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு சிம்ம கதியில் புறப்பட்ட நம்பெருமாள் வலதுபுற மதில்படி வழியாக ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிகேட்டான் வாயில், தங்கக்கொடிமரம் வழியாக துரைப்பிரதட்சணம் செய்து, குலசேகரன் திருச்சுற்று, விரஜாநதி மண்டபத்தை வந்தடைந்தார்.
அங்கு நம்பெருமாளுக்கு வேத விற்பன்னர்கள் வேதங்களை வாசித்தனர். இதைத் தொடர்ந்து பரமபதவாசல் திறக்கப்பட்டது.
அப்போது பக்தர்களின் ரங்கா ரங்கா முழக்கத்துடன் காலை 4 மணிக்கு பரமபதவாசல் வழியாக கடந்து சென்று பிரவேசித்தார் நம்பெருமாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.