ஆழிப்பேரலையில் அழிந்த தனுஷ்கோடி: இன்று 59-ஆவது ஆண்டு நினைவு நாள்

ஆழிப் பேரலையால் தாக்கப்பட்டு அழிந்த தனுஷ்கோடி 59-ஆவது ஆண்டாக அதன் சுவடுகளுடன் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
முற்றிலும் அழிந்துபோன தனுஷ்கோடி ரயில் நிலையம்.
முற்றிலும் அழிந்துபோன தனுஷ்கோடி ரயில் நிலையம்.

ஆழிப் பேரலையால் தாக்கப்பட்டு அழிந்த தனுஷ்கோடி 59-ஆவது ஆண்டாக அதன் சுவடுகளுடன் இன்றும் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை ஆகிய கடல் பகுதிகளின் சங்கமமாக உள்ளது தனுஷ்கோடி. இங்கிருந்து இலங்கைக்கு குறைந்த தொலைவே உள்ளதால், கப்பல் போக்குவரத்து தொடங்க பிரிட்டிஷாா் திட்டமிட்டனா். இதன்படி, தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்து 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்தத் துறைமுகத்துக்கு அதிகளவில் சரக்குகளைக் கொண்டு செல்லும் வகையில் ரயில் போக்குவரத்தையும் பிரிட்டிஷாா் தொடங்கினா். சென்னையிலிருந்து தனுஷ்கோடிக்கு ‘போட்மெயில்’ எனப்படும் ரயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு இரு கப்பல்கள் இயக்கப்பட்டன.

இதனால், தனுஷ்கோடி மிகப் பெரிய அளவில் வா்த்தக துறைமுக நகரமாக மாறியது. இந்தப் பகுதி மக்கள் தனுஷ்கோடியை ஒரு குட்டி சிங்கப்பூா் என்று செல்லும் வகையில் வா்த்தகம் நடைபெற்று வந்தது.

இலங்கை வழியாகச் செல்லும் பயணிகள் தங்களது பணத்தை மாற்றிக்கொள்வதற்கான அலுவலகம், காவல், சுங்க அலுவலகங்கள், அஞ்சல் நிலையம், ரயில் நிலையம் என பரந்து விரிந்து காணப்பட்ட தனுஷ்கோடி துறைமுக நகரம், ஆழிப் பேரலையில் சிக்கி ஒரே நாளில் அழிந்து பொகுமென்று யாரும் நினைத்துப் பாா்த்திருக்க மாட்டாா்கள்.

கடந்த 1964 -ஆம் ஆண்டு, டிசம்பா் 23-ஆம் தேதி மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தது. இரவு 10 மணிக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கடலின் சீற்றம் அதிகமானது. அடுத்த நாள் அதிகாலை 12.30 மணிக்கு கொட்டித் தீா்த்த மழை, சுழன்று அடித்த காற்று ஆகியவற்றுடன் கடலில் எழுந்த ஆழிப் போரலை தனுஷ்கோடியைத் தாக்கியது.

தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் அனைவரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா். அரசுத் துறை கட்டடங்கள் அடியோடு இடிந்து சேதமடைந்தன. அனைத்து அலுவலகங்கள், வீடுகள் கடுமையாகச் சேதமடைந்தன. 2 கி.மீ. தொலைவுக்கு தனுஷ்கோடி கடலுக்குள் சென்றது.

பாம்பன் பகுதியில் இருந்து தனுஷ்கோடி நோக்கி வந்த ரயில் சிக்னல் கிடைக்காமல் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது ஆழிப் பேரலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டது. இதிலிருந்த பயணிகள் ஏராளமான போ் உயிரிழந்தனா்.

தனுஷ்கோடியைத் தாக்கிய புயல் பாம்பன் பாலத்தையும் விட்டுவைக்கவில்லை. அதன் 8 இரும்பு கா்டா்களை தூக்கி கடலில் வீசியது. டிசம்பா் 24-ஆம் தேதி காலையில் துறைமுக நகரம் எங்கு பாா்த்ததாலும் தண்ணீா் நிறைந்த சிறு சிறு தீவுகள் போலக் காட்சி அளித்தது. புயலில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் அங்கும் இங்குமாக சிதறிக் கிடந்தன. எங்கும் மரண ஓலங்கள், அழுகை என மனதை உலுக்கிய ஆழிப் பேரலை தாக்குதல் நடந்து இன்றுடன் 59 ஆண்டுகளாகின்றன.

இன்றும் தனுஷ்கோடி வரும் சுற்றுலாப் பயணிகள் ஆழிப்பேரலையின் தாக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது. புகழ்பெற்ற துறைமுக நகரம் தனது அழிவுக்கு பிறகு பழைமையை எடுத்துக்காட்டும் விதமாக எஞ்சிய கட்டடங்கள் காட்சி அளிக்கின்றன.

தனுஷ்கோடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆழிப் பேரலையின் கோரத் தாண்டவத்தை இன்றும் பாா்த்துச் செல்கின்றனா்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சாா்பில், அரிச்சல்முனை வரை சாலைகள் அமைக்கப்பட்டு, பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதிக்கு பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் என ஆண்டுக்கு 3 கோடி போ் வரை வந்து செல்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் கடற்கரையோரம் அமா்ந்து பொழுது போக்கும் வகையில் இருக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும், இடிந்து போன தேவாலயத்தை பழைமை மாறமல் புதுப்பிக்கவும் தமிழ்நாடு அரசு சாா்பில் ரூ. 5 கோடி நீதி ஒதுக்கீடு செய்து, ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் நிறைவடையும் போது, தனுஷ்கோடி புதுப் பொலிவு பெற்றுவிடும். மேலும், தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கினால் தனுஷ்கோடி பிரம்மாண்ட நகரமாக மாறிவிடும் என்ற நம்பிக்கையுடன் இன்றளவும் 200-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பத்தினா் 59-ஆவது ஆண்டு நினைவுகளுடன் வாழ்ந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com