சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்! நாளை ஆருத்ரா தரிசனம்

சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோட்டம்! நாளை ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை புதன்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

வீதிவலம் வந்த 5 தேர்கள்
நடராஜர் கோயிலில் கடந்த டிச.18-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவீதி தேர்நிலையை அடைகின்றன.

உழவாரப்பணி மற்றும் திருமுறை இன்னிசை
தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் எம்.பொன்னம்பலம் தலைமையில் சந்திர பாலசுப்பிரமணியன் முன்னிலையில் ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்தி சென்றனர்.

மீனவ சமுதாயத்தினரின் மண்டகப்படி
மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால் தாய் வீட்டு சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவர் சமுதாயத்தினர் சார்பில் தேரோட்டத்தின் போது சீர் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளை மகாபிஷேகம், ஆருத்ரா தரிசனம்
டிச.27-ம் தேதி  புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் 3.30 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். டிச.28-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதிஉலா காட்சியுடன் விழா முடிவடைகிறது.

விழா ஏற்பாடுகளை உற்சவ ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர், துணைச்செயலாளர் க.சி.சிவசங்கர தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் ஏ.மீனாட்சிநாத தீட்சிதர் ஆகியோர் செய்திருந்தனர். 

விழுப்புரம் சரக டிஐஜி ஜியா உல் ஹக், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆர்.ராஜாராம், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆகியோர் சமாய் சிங் மீனா ஆகியோர் நேரடி மேற்பார்வையில் சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி தலைமையில் காவல்துறை ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் காவல்துறை  பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். 

குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர்  பிரபாகரன், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் செய்தனர். காவல்துறையினருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள்  போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com