என்னை நானே ஒப்படைத்து உழைத்து வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஆதிதிராவிடர் நலனில் தனி கவனம் செலுத்தி திட்டங்களை தீட்டி வருகிறோம். மானுட நெறிகளின்படி தமிழ்நாட்டை உருவாக்க என்ன நானே ஒப்படைத்து உழைத்து வருகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 
என்னை நானே ஒப்படைத்து உழைத்து வருகிறேன்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு


சென்னை: ஆதிதிராவிடர் நலனில் தனி கவனம் செலுத்தி திட்டங்களை தீட்டி வருகிறோம். மானுட நெறிகளின்படி தமிழ்நாட்டை உருவாக்க என்ன நானே ஒப்படைத்து உழைத்து வருகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை, கலைவாணர் அரங்கில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது: 

தந்தை பெரியார், ஒடுக்கப்பட்ட மாந்தர்களின் விடுதலைக்காகவும், அவர்களுடைய மனித மாண்பை மீட்டு எடுப்பதற்காகவும், அறிவாயுதம் ஏந்திய புரட்சியாளர்,அரசியல் சட்ட பிதாமகர் அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் காட்டிய சமூகநீதிப் பாதையில் திராவிட மாடல் ஆட்சிய ஆட்சியை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம்.

சமூக நீதி - சமத்துவம் - சமதர்மம் - சகோதரத்துவம் - ஆகிய மானுட நெறிகளின்படி தமிழ்நாட்டை உருவாக்கத்தான் என்னை நான் ஒப்படைத்து
உழைத்துக் கொண்டு வருகிறேன்.

எல்லார்க்கும் எல்லாம் என்பதை நிர்வாக நெறியாக கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம். அந்த அடிப்படையில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள், சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் உயர்த்தி,  அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

இந்தத் திட்டங்களை சிறப்புக் கவனம் எடுத்து அக்கறையோடு தீட்டி செயல்படுத்தி வருகின்ற  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜை நான் மனதார பாராட்டுகிறேன். அமைதியாக, அதே நேரத்தில் ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து கொண்டு வருகிறவர் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.

கடந்த மூன்றாண்டு காலத்தில் இந்தத் துறையின் சார்பில், அரசியலமைப்புச் சட்ட நாயகர், அண்ணல் அம்பேத்கரை போற்றும் விதத்தில் அவர்  பிறந்தநாளான ஏப்ரல் 14-ஐ அனைத்து மக்களும் சமத்துவமாக வாழவேண்டும் என்ற அவருடைய விருப்பத்தை எடுத்துச்சொல்கிற ‘சமத்துவ நாளாக’ நாம் கொண்டாடி வருகிறோம்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தொண்டாற்றி வருகிற நபர்களுக்கு ஆண்டுதோறும் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கப்பட்டு
வருகிறது. இப்போது, இந்த விருதுடன் பரிசுத் தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை, தகுதியுரை மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் கல்வி பயில கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருத்தி அமைக்கப்பட்ட முனைவர் பட்டப்படிப்புக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் தலா ரூ.1 லட்சம் வீதம் 2,974 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

வெளிநாடுகளுக்குச் சென்று உயர்கல்வி பயில மாணவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டு, 31 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி விடுதிகள் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கிப்படிக்கின்ற மாணவர்களுக்கு மாதந்திர உணவுக்கட்டணம் ரூ.1000 -லிருந்து ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 1,100-லிருந்து ரூ.1,500 ஆகவும் நமது அரசால் உயர்த்தி வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் 12 விடுதிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அயோத்திதாசப் பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல, பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடந்த மூன்றாண்டுகளில் பழங்குடியினர் குடியிருப்புகளில் ரூ.475 கோடி
செலவில் 25 ஆயிரத்து 262 அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களிடையே தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24 முதல் 30-ஆம் நாள் வரை “மனிதநேய வார விழா” நடத்திக் கொண்டு வருகிறோம். 

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தை உருவாக்கியிருக்கோம். கடந்த ஓராண்டுகளில் 102 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிற தீருதவித் தொகை தற்போது உயர்த்தப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

தாட்கோவாவில் செயல்படுத்தப்படுகிற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மூலமாக கடந்த நிதியாண்டில் மட்டும் 10 ஆயிரத்து 466 பயனாளிகளுக்கு ரூ.152 கோடி மானியமாக வழங்கப்பட்டிருக்கிறது.

தொழில் முனைவோருக்கான சமூகநீதியை உறுதிப்படுத்துற நோக்கில் தமிழ்நாடு பட்டியலினத்தவர், பழங்டியினர் புத்தொழில் நிதியம் 2022-23-ஆம் நிதியாண்டில் 30 கோடி ரூபாய் நிதியுடன் தொடங்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு 21 புத்தொழில் நிறுவனங்கள் ரூ.28 கோடியே 10 லட்சம் பயன்பெற்ற நிலையில் இந்தத் திட்டத்தின் சிறப்பான வெற்றியை கருத்தில் கொண்டு 2023-24-ஆம் நிதியாண்டுக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் இந்த நிதியாண்டில் 5 பழங்குடியினர் மற்றும் 21 ஆதிதிராவிடர் நிறுவனங்கள் என்று மொத்தம் 26 நிறுவனங்கள் தேர்வு
செய்யப்பட்டிருக்கிறது. இதில் 13 நிறுவனங்கள் மகளிரால் நிர்வகிக்கப்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி, வணிகம், மற்றும் சேவை சார்ந்த புதிய தொழில் தொடங்க, திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் ரூ.ஒன்றறை கோடி வரை கடன் பெற உதவுகிற "அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்" நம்முடைய அரசால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 100 கோடி  நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியிருக்கிறது.

அரியலூர் மாவட்டத்தில் இருக்கின்ற 16 கிராமங்களில் வாழ்கிற மக்களில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் முனைவோராக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருக்கின்ற பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகிற வகையில் உன்னிக்குச்சி மூலமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் செலவில் தளவாடப் பொருட்கள் உற்பத்திக்கான தொழிற்கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

காடுகளில் வாழ்கின்ற பழங்குடியினரின் வன உரிமையை பாதுகாக்க, 11 ஆயிரத்து 601 தனிநபர் வன உரிமைகளும், 691 சமூக வன உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கிறது.

தூய்மைப் பணியாளர் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, 87 ஆயிரத்து 327 உறுப்பினர்களுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

புதிரை வண்ணார் நல வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, அந்த மக்களுடைய வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள 2023-2024-ஆம் நிதியாண்டில் ரூ.10 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் ஆன்றோர் மன்றம், பழங்குடியினர் நல வாரியம் மற்றும் நரிக்குறவர் நல வாரியம் ஆகியவை திருத்தி அமைக்கப்பட்டு
செயல்படத் துவங்கியிருக்கிறது.

சமூக நிலைகளில் உயர்த்துகின்ற அனைத்து முயற்சிகளையும் நம்முடைய அரசு கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது. இதன் தன்னம்பிக்கை - சுயமரியாதை - அதிகாரத்தில் பங்கு போன்ற நிலைகளில் ஆதிதிராவிட பட்டியலின மக்களை உயர்த்துகின்ற பணிகளை அரசு செய்துகொண்டு வருகிறது.

இப்படி தொடர்ச்சியான பணிகள் மூலமாகதான் சுயமரியாதைச் சமதர்ம சமுதாயத்தை நாம் உருவாக்கியாகவேண்டும். நிதி ஒதுக்கீடுகளால்,
தொலைநோக்குப் பார்வையால், கண்காணிப்பால், மற்ற வளர்ச்சிகளை நாம் எட்டிடலாம். ஆனால், சமூக வளர்ச்சியும், சிந்தனை வளர்ச்சியும் மக்கள் மனங்களில் உருவாகவேண்டும். மக்களுடைய மனதளவில் மாற்றங்கள் ஏற்படவேண்டும்.

இது அவ்வளவு சீக்கிரமாக ஏற்படாது என்பதும் உண்மைதான். அதே நேரத்தில் சமூக வளர்ச்சி - சிந்தனை வளர்ச்சியை உருவாக்குகின்ற நம்முடைய விழிப்புணர்வு பயணம் என்பது, தொய்வில்லாமல் தொடரவேண்டும். அந்தப் பணிகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு செய்துகொண்டு வருகிறது.

அண்ணல் அம்பேத்கரின் கனவான சுதந்திரம், சமத்துவம்,சகோதரத்துவம் ஆகிய பண்புகள் நிறைந்த, சமூகநீதியின் அடிப்படையிலான ஒரு சமத்துவ சமுதாயமாக தமிழ்நாட்டை உருமாற்றும் வகையில் நம்முடைய விழிப்புணர்வுப் பயணத்தை தொய்வின்றித் தொடருவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com