எண்ணூர் தொழிற்சாலையில் வாயுக் கசிவு: மக்களுக்கு மூச்சுத் திணறல்

எண்ணூரில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு வாயுக் கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.
எண்ணூர் தொழிற்சாலையில் வாயுக் கசிவு
எண்ணூர் தொழிற்சாலையில் வாயுக் கசிவு

எண்ணூரில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு திடீரென அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 

இதனை அடுத்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

எண்ணூர் பெரியகுப்பம் அருகே விரைவு சாலையில் தனியார் உரத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பயிர்களுக்கு தேவையான பல்வேறு வகையான ரசாயன உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ரசாயன உரங்களை தயாரிப்பதற்கு தேவையான அம்மோனியா உள்ளிட்ட மூலப் பொருள்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இதற்கு வசதியாக தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் அனுமதியுடன் எண்ணூர் சிறு துறைமுகம் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடலில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் வெளிநாடுகளில் இருந்து வரும் ரசாயனம் நிரப்பிய கப்பல் நடுக்கடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்படும். பின்னர் ஏற்கனவே இங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக குழாய்கள் மூலம் தொழிற்சாலைக்கு ரசாயன பொருள்கள் பம்பிங் செய்யப்பட்டு சேமிப்புக் கிடங்குகளில் தேக்கி வைக்கப்படும் நடைமுறை உள்ளது.  

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அமோனியா வாயு ஏற்றிய நிலையில் சரக்குக் கப்பல் ஒன்று எண்ணூர் சிறுதுறைமுகத்திற்கு வந்துள்ளது. வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடைமுறையின்படி குழாய்கள் இணைக்கப்பட்டு அமோனியா வாயுக்களை பம்பிங் செய்யும் பணி தொடங்கியுள்ளது.  

இந்தக் கப்பல் முழுமையாக காலி செய்யப்பட ஒரு நாள் முதல் ஒன்றரை நாள்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமார் 11.30 மணி அளவில் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாகவோ அல்லது கப்பலுடன் சரியாக இணைக்கப்படாததாலோ அம்மோனியா வாயு பெரிய அளவில் வெளியேறியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சுற்றுப் பகுதியில் வாயுக் கசிவு வேகமாக பரவியதையடுத்து பெரிய குப்பம், சின்னக் குப்பம் ஆகிய கிராமங்களில் முழுமையாகவும், அன்னை சிவகாமி நகர், இந்திரா காந்தி குப்பம், எர்ணாவூர், பாரதியார் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வாயுக் கசிவு வேகமாக பரவியது.  இதில் அதிகளவில் பாதிப்பிற்கு உள்ளான பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி எண்ணூர் விரைவு சாலை வழியாக வெகு தூரம் ஓட்டமும் நடையுமாக திருவொற்றியூர்  காசி விசுவநாதர் கோயில் குப்பம் பகுதியில் அமைந்துள்ள சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. சங்கர் வீட்டின் முன்பு வந்து சேர்ந்தனர்.

இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி. சங்கர் உடனடியாக மீட்பு பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் தகவல் அறிந்த போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் உடனடியாக செயல்பட்டு மீட்பு பணிகளை தொடங்கினர்.  இப்பகுதியில் வசித்த மக்களை வெளியேற்றுவதற்காக ஏராளமான ஆம்புலன்ஸ் வாகனங்கள், பேருந்துகள் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

வாயுக் கசிவால் மூச்சு திணறல், தலைவலி, வாந்தி, மயக்கம், இருமல் ஏற்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் திருவொற்றியூரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர்.  நள்ளிரவு தொடங்கிய இப்பணிகள் புதன்கிழமை காலை வரை நீடித்தது.  

பின்னர் வாயு கசிவு தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள் பலரும் படிப்படியாக தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.  இருப்பினும் அடுத்து என்ன ஆகுமோ என்ற பயத்தில் சாலைகளில் அமர்ந்து உள்ளனர். அம்மோனியா வாயு நெடி புதன்கிழமை காலையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏற்கனவே எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தற்போது அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்து அறிந்தவுடன் பெரியகுப்பம் மற்றும் ஆலை முன்பு ஆயிரக்கணக்கில் திரண்டு வருகின்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படா வண்ணம் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், அமோனியம் வாயுக் கசிந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆலையில் வாயிலில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய வாயு, 2,090 மை.கி. ஆக உள்ளது. அதேபோல், கடலில் 5 மை.கி. ஆக இருக்க வேண்டிய வாயு, 49 மை.கி. ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வாயுக்கசிவுக்கான காரணங்கள் குறித்து புதன்கிழமைக்குள் கண்டறியப்படும். தற்போது வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டு விட்டதால் பொதுமக்கள் வீதி அடைய வேண்டாம். உரிய விசாரணை நடைபெற்று வாயுக் கசிவுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   வருவாய், காவல்  சுற்றுச்சூழல்  உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகள்  தொடர்ந்து இப்பகுதியில் முகாமிட்டு நிலைமையை கவனித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் தற்போதைய நிலைமை குறித்தும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த பிரச்னையையடுத்து எண்ணூர், திருவொற்றியூரில் கடலோரப்  பகுதியில் அமைந்துள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் எண்ணூர் விரைவு சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் போராட்டங்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com