
சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பல்கலைக் கழகத்திலுள்ள துணைவேந்தர் அறை மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர் ஜெகநாதன் கைது சம்பவத்தை அடுத்து இந்த சோதனை நடைபெறுகிறது.
துணை வேந்தராக பணியாற்றும்போது வணிக நிறுவனத்தைத் தொடங்கியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதனை காவல் துறையினர் நேற்று அதிரடியாக (டிச. 26) கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மூன்று குழுக்களாக இணைந்து துணைவேந்தர் அலுவலகம் இல்லம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
துணைவேந்தர் கைது பின்னணி..
பெரியார் பல்கலைக் கழகத்தில், சமீபத்தில் பணியாளர்கள் நிரப்புவதில் சமூக நீதி மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றாதது, பல்கலைக்கழக பேராசிரியர் ஆராய்ச்சி படிப்பு மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கெல்லாம் காரணம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பில் இருந்து வரும் பல்கலைக்கழக துணைவேந்த ஜெகநாதன் என்பது வெளிப்படையாக இருந்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
இதனிடையே பெரியார் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும்போது, பல்வேறு பகுதிகளிலுள்ள நபர்களை இணைத்து வணிக நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். தனியார் கல்லூரிகளைத் தொடங்கிக்கொள்வதற்கான அனுமதி வழங்கும் அறக்கட்டளையாக இந்த நிறுவனம் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தை பல்கலைக்கழக அதிகாரிகளை கொண்டு செயல்பட வைத்து, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதும், கல்வி வளர்ச்சிக்காக ஆக்க பூர்வமாக எதையும் செய்யாத நிலையில், தன்னுடைய சொந்த நிறுவனத்தை லாபம் பெற செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக பல்கலைக் கழக தொழிலாளர் நலச்சங்க ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரின் அடிப்படையில் துணை வேந்தரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.