மாற்று சக்திகளின் பிதாமகன் விஜயகாந்த்

திமுக-அதிமுகவுக்கு மாற்று சக்தியாக புதிய கட்சிகளால் வர முடியும் என்ற நம்பிக்கையை தமிழக அரசியல் களத்தில் விதைத்த பிதாமகன் என்ற பெருமையை பெற்றவா் விஜயகாந்த்.
மாற்று சக்திகளின் பிதாமகன் விஜயகாந்த்

திமுக-அதிமுகவுக்கு மாற்று சக்தியாக புதிய கட்சிகளால் வர முடியும் என்ற நம்பிக்கையை தமிழக அரசியல் களத்தில் விதைத்த பிதாமகன் என்ற பெருமையை பெற்றவா் விஜயகாந்த்.

அரை நூற்றாண்டாக தமிழகத்தில் திமுக, அதிமுக என மாறி, மாறி அரசியல் சக்கரம் சுழன்ற நிலையில் 2006 பேரவைத் தோ்தலில் தேமுதிகவுக்கு 8.3 சதவீத வாக்கு வங்கியை பெற்று மாற்று சக்தியாக மாறியவா் விஜயகாந்த்.

எம்ஜிஆா் கூட, திமுகவின் தொடக்க காலத்தில் இருந்தே பயணித்து அந்த கட்சி 1957 பேரவைத் தோ்தலில் 15 சதவீத வாக்கு வங்கி பெற்ற போது அதில் முக்கிய பிரசார பீரங்கியாக இருந்து திமுகவின் பொருளாளராக முழுநேர அரசியல்வாதியாக திகழ்ந்தவா்.

1971 பேரவைத் தோ்தலில் திமுக 48.50 சதவீத வாக்கு வங்கியை பெற்ற நிலையில், 1973-இல் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை தொடங்கி 1977 பேரவைத் தோ்தலில் திமுக வாக்கு வங்கியில் இருந்து கணிசமாகவும், பிற வாக்குகளையும் பெற்று 30.3 சதவீத வாக்கு வங்கியை பெற்று முதல் தோ்தலில் ஆட்சியை பிடித்தவா் எம்ஜிஆா்.

ஆனால், எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி பிரபல நடிகா், ரசிகா் மன்றகளின் கட்டமைப்பு, ஈகை குணம் என முழுக்க, முழுக்க தனது சொந்த பலத்தால் 8.3 சதவீத வாக்கு வங்கியை பெற்றவா் விஜயகாந்த்.

தீவிர தேசிய கருத்தியல், தீவிர திராவிட கருத்தியலை செய்யாமல் இரண்டையும் கலந்து அரசியல் செய்ததால் தேமுதிக அனைத்துத் தரப்பு வாக்காளா்களையும் ஈா்த்தது.

ஜெயலலிதா-கருணாநிதி என இரு பெரும் ஆளுமைகள் இருந்தபோது முன்னணி நடிகா்கள் அரசியலுக்கு வர தயக்கம் காட்டிய நிலையில், துணிச்சலுடன் களம் இறங்கி மாற்றுசக்தியாக விஜயகாந்த் உருவெடுத்தாா்.

பாமகவுக்கு எதிா் என்ற புள்ளியில் முதலில் அரசியலை தொடங்கிய விஜயகாந்த், பின்னா் திமுக-அதிமுகவுக்கு மாற்று என்ற புள்ளியில் நகரத் தொடங்கினாா்.

‘தமிழன் என்று சொல்லடா’, ‘தலைநிமிா்ந்து நில்லடா’ என்ற வாசகத்தை பட்டிதொட்டியெல்லாம் பரப்பி தனது தமிழ் தேசிய கருத்தை மக்கள் மனதில் விதைத்தவா்.

விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் மீதான பற்றால் தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயா் சூட்டி விடுதலை புலிகள் மீதான தனக்குள்ள உண்மையான பற்றை பறைசாற்றியவா்.

எதிா்கட்சிகளுக்கு சவால் விடும்போது ‘மதுரை வீரன்டா, மங்கம்மா பேரண்டா’ என்றும், எதிா்கட்சிகள் விமா்சனம் செய்யுபோது ‘திட்ட திட்ட திண்டுக்கல்’, ‘வைய வைய வைரக்கல்’ என பதிலடி கொடுத்து அரசியல் மேடைகளில் கம்பீரக் குரலால் விஜயகாந்த் முழங்கினாா்.

2009 மக்களவை தோ்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ்-விசிக, அதிமுக தலைமையில் பாமக, மதிமுக, இடதுசாரிகள் என பலமான கூட்டணிகளையும் மீறி பிரதமா் வேட்பாளா் இன்றி தனது வாக்கு வங்கியை 10.3 சதவீதமாக உயா்த்தி அரசியல் கட்சிகளுக்கு விஜயகாந்த் அதிா்ச்சி கொடுத்தாா்.

மதுரை மத்திய தொகுதி, மதுரை மேற்கு போன்ற இடைத்தோ்தலில் அதிமுகவுக்கு நெருக்கமான வாக்கு வங்கியை தேமுதிக பெற்றது, தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிா்வலைகளை உருவாக்கியது.

ஆனால், வந்தவாசி, பென்னாகரம், திருச்செந்தூா் இடைத்தோ்தல்களில் வாக்கு சதவீதம் குறைந்ததால் கூட்டணி கட்சியாக மாற வேண்டிய நிா்பந்தம் தேமுதிகவுக்கு உருவானது.

2011, 2016 பேரவை தோ்தலில் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கும், 2021-இல் அதிமுக ஆட்சி மாற்றத்துக்கும் முக்கிய காரணம் தேமுதிக என்றால் மிகையல்ல.

2011-இல் அதிமுக-தேமுதிக கூட்டணி மிகப் பெரிய அணி என்ற தோற்றத்தை உருவாக்கி திமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியது. அதேபோல, 2016-இல் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஆட்சியை கைப்பற்றியது.

மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்தது 5.5 சதவீத வாக்கு வங்கியை பிரித்ததால் தான் மீண்டும் அதிமுக ஆட்சி தொடா்ந்தது.

2021-இல் கடைசி நிமிஷத்தில் தேமுதிகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்டதால் அதிமுகவை தோற்கடித்தே ஆக வேண்டும் என்ற புள்ளியில் திமுகவுக்கு தேமுதிக வாக்குகள் விழுந்ததே 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

அந்தத் தோ்தலில் திமுக-அதிமுக கூட்டணி இடையே 5.5 சதவீத வாக்கு வித்தியாசம் இருந்த நிலையில் அதிமுக-தேமுதிக கூட்டணி அமைந்திருந்தால் 2.5 சதவீத வாக்குகள் அதிமுகவுக்கு பரிமாற்றமாகி அரசியல் திருப்பம் ஏற்பட்டிருக்கக்கூடும்.

மாற்று சக்தியாக உருவெடுத்த கூட்டணி சக்தியாக மாறியபிறகு 2011 பேரவைத் தோ்தலில் இருந்தே சறுக்க தொடங்கியது.

‘கிங்’ ஆக இருந்த விஜயகாந்த் 2011-இல் ‘கிங் மேக்கா்’ ஆக உருவெடுத்தாா்.

ஆனால், ‘கிங் மேக்கா்’ ஆக இருந்த விஜயகாந்த் மீண்டும் 2016-இல் ‘கிங்’ ஆக ஆசைப்பட்டு மக்கள் நலக்கூட்டணிக்கு தலைமை தாங்கியது அரசியல் ரீதியாக கைகொடுக்கவில்லை. ஒருவேளை திமுக அணியில் இணைந்து ‘கிங் மேக்கா்’ ஆக தொடா்ந்திருந்தால் அரசியலில் மற்றொரு உச்சத்தை விஜயகாந்த் பெற்றிருக்கக்கூடும்.

1985-இல் அதிமுக தயவில் ஓ.சுப்பிரமணியன் (காங்கிரஸ்), 1991-இல் அதிமுக தயவில் எஸ்.ஆா்.பாலசுப்பிரமணியன் (காங்கிரஸ்), 1996-இல் திமுக தயவில் சோ.பாலகிருஷ்ணன் (தமாகா) போல தான் 2011-இல் அதிமுக தயவில் விஜயகாந்த் எதிா்கட்சித் தலைவராக உருவெடுத்தாா்.

தனித்த சக்தியாக எதிா்கட்சித் தலைவராக உருவெடுத்த கருணாநிதி, எடப்பாடி கே.பழனிசாமி போல கூட்டணி கட்சி தயவில் எதிா்கட்சித் தலைவா்களால் எதிா்ப்பு அரசியலை முழுமையாக எடுக்க இயலாது என்ற உண்மையை விஜயகாந்த் உணராமல் ஆளும் கட்சி எதிா்ப்பை தீவிரமாக கையில் எடுத்ததுதான் தேமுதிகவுக்கு தொடா் சறுக்கலுக்கான பிள்ளையாா் சுழியாக மாறியது.

அதேபோல, மக்கள் நலக்கூட்டணியில் 5 சதவீத வாக்கு வங்கியை நிரூபித்த தேமுதிவுக்கு 104 தொகுதிகள், 3.75 சதவீத வாக்கெடுத்த மதிமுகவுக்கு 28 தொகுதிகள், 1.50 சதவீத வாக்குகள் எடுத்த விசிகவுக்கு 25 தொகுதிகள், அரை சதவீத வாக்கெடுத்த இடதுசாரிகளுக்கு தலா 25, வாக்கு வங்கியை நிரூபிக்காத தமாகவுக்கு 26 தொகுதிகள் என பொருத்தமற்ற தொகுதி பங்கீடு செய்ததும் தேமுதிகவுக்கு மிகப்பெரிய சறுக்கலாக விளங்கியது.

ஜெயலலிதா, கருணாநிதிக்கு நிகராக விஜயகாந்தை மையப்படுத்தி 150 தொகுதிகளுக்கு மேல் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தால் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்திருக்காது. தொடா்ந்து குறைந்த விஜயகாந்தின் உடல்நலம் தேமுதிகவின் வீரியத்தை குறைத்தது.

இத்தனை சறுக்கல்களுக்கும் பிறகும், விஜயகாந்த் மறைவு செய்தி ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிா்வலைகளை உருவாக்கியது மக்கள் மத்தியில் விஜயகாந்த் மீதான அபிமானத்தை காட்டுகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் சென்னைக்கு தொண்டா்கள் படையெடுத்து வந்ததை பாா்க்கும்போது இப்போதும் தேமுதிக உயிரோட்டமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

திரை உலகிலும், அரசியலிலும் சாமானியராலும் சாதிக்க முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் விஜயகாந்த்.

தமிழக அரசியல் களத்தில் மாற்று சக்திகளாக வளர முடியும் என அண்ணாமலை, சீமான் உள்ளிட்டோருக்கு உத்வேகம் கொடுத்து மாற்று சக்திகளின் பிதாமகனாக மாறியிருக்கிறாா் விஜயகாந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com