விமரிசையாக நடைபெற்ற மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா

மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் தெப்பத்தில் வலம்வந்து மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.
விமரிசையாக நடைபெற்ற மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா
விமரிசையாக நடைபெற்ற மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழா

மதுரை: மீனாட்சியம்மன் கோவில் தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் தெப்பத்தில் வலம்வந்து மைய மண்டபத்தில் எழுந்தருளினர்.

உலகப் பிரசித்திபெற்ற  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத்திருவிழா  கடந்த ஜனவரி 24 ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை  தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நேற்று சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு மண்டபத்தில் கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தைப்பூச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் மீனாட்சியம்மன் கோவிலின் உப கோவிலான மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி - முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர். 

அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். 

இதனையடுத்து பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுக்க  தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

தெப்பகுளத்தில் நீர்நிரம்பி இருப்பதால் தெப்பத்திலும் காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர்.

இன்று மாலை சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். பின்னர், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

அதன்பிறகு முக்தீசுவரர் கோவிலில் எழுந்தருளி சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. பின்னர், அங்கிருந்து புறப்பாடாகி மீனாட்சியம்மன் கோவில் வந்தடைகின்றனர். விழாவையொட்டி, பிப்ரவரி 4- ந் தேதி அதிகாலை சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோவிலுக்குள் வரும் வரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

எனவே, வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களின் நலன் கருதி ஆயிரங்கால் மண்டபம் (கலைக் கூடம்) திறந்து வைக்கப்படும். மேற்கண்ட நாளில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் பகல் 12.30 வரை, மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்

மீனாட்சியம்மன் தெப்பதிருவிழாவை நேரில் பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், அம்மனின் அருள் பெற்றதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com