
வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகியோரிடம் இருந்து இளைஞராக கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு இளம் இந்தியாவுக்கான வாய்ப்புகளும் சவால்களும் குறித்து பாஜக எம்.பி. வருண் காந்தி பேசினார்.
அவர் பேசியதாவது, “நான் அமைச்சராக இருந்திருந்தால் பாடத்திட்டம், ஆசிரியர்கள் எண்ணிக்கை, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமனம், தொழிற்கல்வி மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன். என்னுடைய நாடாளுமன்ற அனுபவத்தில் இதுவரை ஒருமுறை கூட தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டதில்லை. அதை நான் விரும்பவில்லை.
வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகியோர் ஒவ்வொரு வகையில் சிறந்த மனிதர்கள். அவர்களிடமிருந்து ஒரு இளைஞராக நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
அதிகாரம் வரும், போகும். அது விஷயமல்ல. ஆனால் மக்களின் குரலாக நாம் இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். நான் சிறுவனாக இருந்தபோது தில்லியில் வசித்தேன். தினமும் எனது தாயார் அங்குள்ள பறவைகளுக்கு காலை உணவளிப்பார். ஒருமுறை நான் தெருவில் செல்லும்போது நாய் என்னைக் கடிக்க வந்தது. அப்போது பறவைகள் தரைக்கு வந்து அந்த நாயைத் தாக்கி என்னைக் காப்பாற்றின. அப்போதுதான் எனக்கு புரிந்தது இயற்கையின் சட்டத்தை நீங்கள் பின்பற்றினால் இயற்கை உங்களைக் காக்கும்” என்றார்.
தொடர்ந்து, பாரத் ஜோடோ யாத்திரை குறித்த கேள்விக்கு பதிலளித்த வருண்காந்தி, இந்தியா ஒற்றுமையாகத் தான் இருக்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும், “எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு எத்தனை நாள் வருகை தந்துள்ளனர் என்பது முக்கியமல்ல. அவர்கள் எவ்வாறு தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர் என்பதையே நாம் கவனிக்க வேண்டும். மக்களுக்காக உழைப்பதை தலைவர்களின் வருகைப்பதிவை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது” என்று வருண் காந்தி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.