தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி: போக்குவரத்து நிறுத்தம்

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதை அடுத்து இரு மாநில எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி: போக்குவரத்து நிறுத்தம்

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதை அடுத்து இரு மாநில எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தமிழக-கர்நாடக எல்லையில் உள்ளது பாலாறு வனப்பகுதி. இங்கு தமிழக மீனவர்கள் காவிரியும், பாலாறும் கலக்கும் இடத்தில் பரிசலில் சென்று மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.  

செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள் பாலாற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் சிலர் தப்பி கிராமங்களுக்கு சென்று விட்டனர். ஆனால், கோவிந்தபாடியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜாவை காணவில்லை. 

இதனால் கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் பலியாகி இருக்கலாம் என கிராம மக்கள் பாலாற்றங்கரையில் தேடி வந்தனர்.

பாலாற்றங்கரையில் இருந்த பரிசல்களையும் மீன்பிடி வலைகளையும் கர்நாடக வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வியாழக்கிழமை மாலை கர்நாடக வனத்துறையினர் பரிசல் மூலம் பாலாற்றங்கரையில் துப்பாக்கிச் சூட்டில் யாரேனும் பலியாகி நீரில் மிதக்கின்றனரா எனத் தேடிப் பார்த்து சென்றுள்ளனர். அப்போது அடி பாலாறு பகுதியில் ஒருவரது சடலம் மிதந்து வருவதை கண்ட வனத்துறையினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்

உயிரிழந்த காரவடையான் என்ற ராஜா மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் இருப்பதும் மான் வேட்டைக்காக சென்றபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனால் இரு மாநில எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

பாதுகாப்பு​: பதட்டமான சூழல் நிலவி வருவதால் பாலாற்றில் உள்ள கர்நாடக வனத்துறை சோதனை சாவடிக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நிறுத்தம்: இந்நிலையில், பாலாற்றங்கரையில் மீனவர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், இரு மாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாடு - கர்நாடகம் எல்லையான பாலாறு வழியாக இரு மாநில போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com