நோயாளிகளுக்கு 500 நாள்களாக  உணவு வழங்கும் தன்னார்வலர்கள்

பர்கூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு 500 நாள்களாக தன்னார்வலர்கள் காலை உணவு வழங்கி வருகின்றனர்.  
நோயாளிகளுக்கு 500 நாள்களாக  உணவு வழங்கும் தன்னார்வலர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள்,  புறநோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு பர்கூரை சேர்ந்த தன்னார்வலர்கள் கடந்த 500 நாள்களாக காலை உணவு வழங்கி வருகின்றனர்.  

பர்கூரை சுற்றியுள்ள பழங்குடியினர்,  இருளர் இன மக்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டால், பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வழக்கம்.  அவ்வாறு சிகிச்சைக்கு வருபவர்கள் காலையில் 6:00 மணிக்கு தங்கள் கிராமத்திலிருந்து புறப்பட்டு வருவதால்,  காலை உணவை உண்ண முடியாமல் அவதிப்படுவதை அறிந்த தன்னார்வலர்கள்,  இவர்களின் பசியை போக்க முன்வந்தனர். 

அறம் செய்ய விரும்புவோர் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி மருத்துவமனைக்கு வருவோருக்கு காலை உணவாக இரண்டு வகை சட்னியுடன் கூடிய நான்கு இட்லிகள், முட்டை,  வாழைப்பழம், நிலக்கடலை  பர்பி  ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். 
 
இந்த அமைப்பில்,  ஓய்வு பெற்ற கல்வித் துறை அலுவலர்கள்,  மருத்துவர்கள்,  வழக்குரைஞர்கள், வியாபாரிகள்,  இளைஞர்கள் உறுப்பினராக உள்ளனர்.  

தங்களது சேவையை அறிந்த பலர்,  தங்களது உற்றார் உறவினர்களின் பிறந்தநாள்,  திருமண நாள்,  நினைவு நாள் அன்று,  தானாகவே முன்வத்து வழங்குகின்றனர்.  இதுவரையில் இந்த சேவை மூலம் 26,700 பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த சமவிகித காலை உணவு வழங்கும்போது அரசு மருத்துவர்கள், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.  மேலும்,  தற்போது, அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com