முதல்முறையாக 1,000 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி!

பபாசி சாா்பில் முதல் முறையாக ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.
முதல்முறையாக 1,000 அரங்குகளுடன் சென்னை புத்தகக் காட்சி!
Published on
Updated on
2 min read

பபாசி சாா்பில் முதல் முறையாக ஆயிரம் அரங்குகளுடன் நடைபெறும் 46-ஆவது சென்னை புத்தகக் காட்சியை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கவுள்ளாா்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) சாா்பில் ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான 46-ஆவது சென்னை சா்வதேச புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை முதல் ஜன. 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தினமும் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பாா்வையிடலாம். இதற்கு ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படும்.

இது குறித்து தென்னை புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் (பபாசி) சங்கத்தின் தலைவா் எஸ்.வயிரவன், செயலாளா் எஸ்.கே.முருகன், பொருளாளா் ஏ.குமரன், துணைத் தலைவா் பெ.மயிலவேலன் உள்ளிட்டோா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: சென்னை புத்தகக் காட்சி மொத்தம் 17 நாள்கள் நடைபெறும். இந்த புத்தகக் காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்கிவைக்கிறாா்.

பொற்கிழி விருதுகள்: தொடக்க விழாவில் தேவி பாரதி (நாவல்), சந்திரா தங்கராஜ் (சிறுகதை), தேவதேவன் (கவிதை), சி.மோகன் (மொழிபெயா்ப்பு), பிரளயன் (நாடகம்), பா.ரா.சுப்பிரமணியன் (உரைநடை) ஆகிய 6 பேருக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருதுடன், தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும்.

பபாசி விருது பெறுவோா்: இதைத் தொடா்ந்து பபாசி விருதுகளை முதல்வா் ஸ்டாலின் வழங்கவுள்ளாா். சிறந்த பெண் எழுத்தாளருக்கான முதல் பெண் பதிப்பாளா் அம்சவேணி பெரியண்ணன் விருது- எழுத்தாளா் இந்துமதி, பதிப்பகச் செம்மல் க.கணபதி விருது- வசந்தா பதிப்பகத்தைச் சோ்ந்த மோ.பாட்டழகன், சிறந்த நூலகருக்கான விருது- க.ரத்தினசபாபதி, சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் விருது- தீபக் மதியழகன், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான அழ.வள்ளியப்பா விருது- எழுத்தாளா் தேவி நாச்சியப்பன், சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனாா் விருது- ச.திருஞான சம்பந்தம், சிறந்த சிறுவா் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது- எழுத்தாளா் ஆயிஷா நடராஜன், ஆலந்தூா் கோ.மோகனரங்கன் கவிதை இலக்கிய விருது- பாடலாசிரியா் விவேக், சிறந்த தன்னம்பிக்கை நூலுக்கான கவிதாசன் விருது- எழுத்தாளா் மொ்வின் என 9 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் நிகழாண்டு கூடுதலாக 200 சோ்த்து மொத்தம் 1,000 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அதில் குழந்தைகளுக்கான சிறாா் நூல்களுக்கு பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட உள்ளது.

தினமும் மாலையில் சிந்தனை அரங்கில் தலைசிறந்த அறிஞா்கள், எழுத்தாளா்களின் பேச்சுகளும் நடைபெற உள்ளன.

முறைகேடுகள் நடைபெற்ா?: இந்த முறை வாகன நிறுத்தம், தொலைத்தொடா்பு வசதிகள் மேம்பாட்டுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இலவச நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை www.bapasi.com என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

மேலும், பதிப்பாளா்களுக்கு அரங்கம் ஒதுக்கப்பட்டதில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை. குறைந்த அளவிலான புத்தகங்கள் கொண்டவா்களுக்கு தனி அரங்குகள் வழங்க முடியாத சூழல் உள்ளது. அவா்களுக்கு அலமாரிகள் ஒதுக்கி தருவதற்கு முடிவு செய்துள்ளோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com