சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி தேரோட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் மார்கழி தேரோட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று சுசீந்திரம் அருள்மிகு ஶ்ரீ தாணுமாலய சுவாமி கோயில். பிரமன், திருமால், சிவபெருமான் ஆகிய மும்மூர்த்திகளும் இங்கு ஒன்றாக காட்சியளிக்கின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த மாதம் (டிசம்பர்) 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

3ஆம் திருவிழாவான டிச.30 ஆம் தேதி மக்கள் மார் சந்திப்பு நிகழ்ச்சியும், 5 ஆம் திருவிழாவான ஜன.1 ஆம் தேதி பஞ்ச மூர்த்தி தரிசனம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தினமும் காலை மாலை வேளைகளில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 9ஆம் திருவிழாவான வியாழக்கிழமை (ஜன.5) காலை கங்காளநாதர் பிட்சாடனராக திருவீதியுலா வந்தார்.

இதைத் தொடர்ந்து கோயிலில் தட்டு வாகனத்தில் விநாயகர், சுவாமி, அம்பாள், அறம் வளர்த்த நாயகியும் எடுத்து வரப்பட்டனர். பின்னர் பெரிய தேரில் சுவாமியும், அம்பாளும், அம்மன் தேரில் அறம் வளர்த்த நாயகியும், பிள்ளையார் தேரில் விநாயகரும் எழுந்தருளினர்.இதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேர் சக்கரத்தில் தேங்காய் உடைக்கப்பட்டது. பின்னர் 3 தேர்களும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.சிவாய நம, திருச்சிற்றம்பலம், ஓம் காளி ஜெய் காளி என்று பக்தர்கள் விண்ணதிர முழக்கமிட்டு தேரை இழுத்தனர். அப்போது தேரின் மேல் ஆகாயத்தில் 3 கருடன் வட்டமிட்டது.  

இவ்விழாவில், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், வ.விஜய்வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்மன் தேரை பெண்கள் இழுத்து வந்தனர்.3 தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக வந்து நிலையை அடைந்தது. தேரோட்டத் திருவிழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

திருவிழாவை முன்னிட்டு நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து சுசீந்திரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. குமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com