பொங்கல் தொகுப்பு: செங்கரும்பு கொள்முதலுக்கு கட்டுப்பாடுகள்; விவசாயிகள் பரிதவிப்பு

பொங்கல் கரும்பு கொள்முதலுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் விவசாயிகள் குழப்பத்தில் சிக்கிப் பரிதவித்து வருகின்றனர்.
பொங்கல் தொகுப்பு: செங்கரும்பு கொள்முதலுக்கு கட்டுப்பாடுகள்; விவசாயிகள் பரிதவிப்பு

பொங்கல் கரும்பு கொள்முதலுக்கு அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளால் விவசாயிகள் குழப்பத்தில் சிக்கிப் பரிதவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டுகளைவிட நிகழாண்டில் அதிக பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், செங்கரும்பு இல்லாத பொங்கல் பரிசுத் தொகுப்பை தமிழக அரசு முதலில் அறிவித்தது. இதனால், கரும்பு விவசாயிகள் மனமுடைந்தனர். ஆங்காங்கே அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். 

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பு வழங்க அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு நீள செங்கரும்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், தற்போது செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வரும் அதிகாரிகள் காட்டும் கெடுபிடிகளால் விவசாயிகள் மீண்டும் அச்சத்துக்கும், குழப்பத்துக்கும் இலக்காகியுள்ளனர்.
கரும்பு கொள்முதலுக்காகக் கடந்த ஓரிரு தினங்களாக அரசு அலுவலர்கள் வயல்களுக்கு நேரில் சென்று கரும்புகளைப் பார்வையிட்டு, அளவீடு செய்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், கூட்டுறவுத் துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம், வேளாண் துறை உள்பட 10 அரசுத் துறைகளை உள்ளடக்கிய அலுவலர்கள் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த ஆய்வுகளின்போது, ஒவ்வொரு செங்கரும்பும் 6 அடி உயரத்தில் இருக்க வேண்டும்; குறிப்பிட்ட தடிமனில் இருக்க வேண்டும்; ஒரு விவசாயி எத்தனை ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்திருந்தாலும், அவரிடமிருந்து 5,000 முதல் அதிகபட்சமாக 10,000 கரும்புகள் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்பன உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கட்டுப்பாடுகள், தங்களை மீண்டும் குழப்பத்துக்கும், கலக்கத்துக்கும் உள்ளாக்கியிருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். கரும்பைப் பொருத்தவரை, அதன் வேர்ப் பகுதி சுமார் அரை அடி முதல் முக்கால் அடி வரை மண்ணில் புதையுண்டு இருக்கும். எனவே, பறித்து எடுக்கப்பட்ட கரும்பை அளவீடு செய்ய வலியுறுத்தினால் சில அதிகாரிகள் அதை ஏற்க மறுக்கின்றனர். அத்துடன், 6 அடிக்கும் குறைவான கரும்புகளை தங்கள் கண்ணெதிரிலேயே வெட்டி அப்புறப்படுத்திவிட வேண்டும் எனவும் சில அலுவலர்கள் தெரிவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட பல பொருள்கள் சர்ச்சைக்கு உள்ளானதால், கரும்பு கொள்முதலில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. அனைத்துக் கரும்புகளும் ஒரே அளவுடன், உரிய தரத்தில் இருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் கரும்பு கொள்முதல் நடைபெறுகிறது. 

பூச்சிகள் தாக்கிய கரும்புகளைக் கண்டிப்பாகக் கொள்முதல் செய்யக் கூடாது. ஒரு விவசாயியிடமிருந்து 5,000 முதல் 10,000 கரும்புகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். இதற்காக, கொள்முதல் செய்யப்படும் கரும்பு வயலின் பட்டா, சிட்டா நகல்களைப் பெற வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. எனவே, கரும்பு கொள்முதலில் கட்டுப்பாடுகள் தவிர்க்க இயலாதது என்றனர்.

இது தொடர்பாக, மயிலாடுதுறை மாவட்டம் வானாதிராஜபுரத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:  
சராசரியாக 6 அடி உயர கரும்பு என்பது சாத்தியமில்லாதது. மிக அதிகமான பராமரிப்பு கொண்ட வயல்களில் மட்டுமே 6 அல்லது அதற்கும் மேலான அடி உயரத்தில் கரும்புகள் கிடைக்கும். மேலும், மழை அதிகம் பெய்த பகுதிகளில் நிச்சயமாக கரும்பின் உயரத்தை 6 அடி அளவில் எதிர்பார்க்க முடியாது.

எனவே, அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும் எனில் 5 முதல் 6 அடி உயரத்திலான கரும்புகளைக் கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். 
குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான கரும்புகளை வழங்க வேண்டும் என்பதில் அரசு காட்டும் உறுதி உள்ளபடியே வரவேற்கத்தக்கது. 

எனினும், இதில் கரும்பு விவசாயிகள் பாதுகாக்கப்பட வேண்டியதும் அவசியம். ஓர் ஏக்கருக்கு சுமார் 18,000 கரும்புகள் வரை கிடைக்கும் என்ற நிலையில், அரசு 10,000 கரும்புகளை மட்டும் கொள்முதல் செய்துவிட்டு, மீதமுள்ள 8,000 கரும்புகளைப் புறக்கணித்தால், அதை வியாபாரிகள் எப்படி கொள்முதல் செய்வார்கள்? அப்படியே வியாபாரிகள் கொள்முதலுக்கு முன்வந்தாலும் மிகக் குறைந்த விலையே கோருவர். இதனால், எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும் என்றார்.

அரசு ஒரு கரும்புக்கு ரூ.33 விலை நிர்ணயித்திருந்தாலும், அதிகாரிகள் ஒரு கரும்புக்கு அதிகபட்சம் ரூ. 17 வரை மட்டுமே விலை நிர்ணயித்து வருகின்றனர். இதற்கு, கொள்முதலுக்குப் பின்னரான போக்குவரத்து செலவு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. எனினும், "குறைந்த விலைக்குக் கரும்புகளைக் கொள்முதல் செய்த மாவட்டம்' என்ற அரசின் பாராட்டைப் பெறும் முனைப்பும் இதில் உள்ளது. 

இது குறித்து அரசு உரிய பரிசீலனை மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான கரும்பு வழங்கவும், அதே நேரத்தில் கரும்பு விவசாயிகள் நஷ்டமடையாத வகையில் விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

புதிய சிக்கல்: கரும்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கிய பிரச்னை, அரசுத் துறை மூலமாகக் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள் வரும் 8-ஆம் தேதியன்றுதான் வெட்டப்பட உள்ளன. 

அதன் பிறகு, எஞ்சியுள்ள கரும்புகளை வியாபாரிகளிடம் விற்பனை செய்வது என்பது விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com