கோயில் பணியாளர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் கருணைக் கொடை!

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு, பொங்கல் கருணைக் கொடையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதோடு, பொங்கல் கருணைக் கொடையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில்,

“கோயில்களின் மேம்பாட்டிற்கும், கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1,000-த்தை ரூ.3,000-ஆக உயர்த்தியும், கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.3,000-த்தை ரூ.4,000- ஆக உயர்த்தியும் வழங்க ஆணையிடப்பட்டது.

கோயிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம் விலக்களித்து, அப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு இணை புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ரூபாய் ஒரு இலட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு மார்ச் 1 முதல் அகவிலைப்படியை 34 விழுக்காட்டிலிருந்து, 38 விழுக்காடாக உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள். இதன் மூலம், சுமார் 10,000 கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், ஆண்டொன்றுக்கு ரூ. 7 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

மேலும், அரசுப் பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.2,000-ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால், இவ்வாண்டு   ரூ. 1.5 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.

இந்த அறிவிப்புகள் கோயில் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதோடு, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அவர்தம் குடும்பத்தாரோடு உற்சாகமாக கொண்டாடிட வழிவகை ஏற்படுத்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com