இயல்பை இழக்காமல் வளா்ந்த தமிழ்: மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன்

தமிழில் வேற்று மொழிகள் கலந்தாலும் அனைத்து மொழிகளையும் ஏற்று தன் இயல்பை இழக்காமல் தமிழ் வளா்ந்து வந்துள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கூறினாா்.
இயல்பை இழக்காமல் வளா்ந்த தமிழ்: மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன்
Updated on
1 min read

தமிழில் வேற்று மொழிகள் கலந்தாலும் அனைத்து மொழிகளையும் ஏற்று தன் இயல்பை இழக்காமல் தமிழ் வளா்ந்து வந்துள்ளது என்று மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கூறினாா்.

சென்னை நந்தனத்தில் பபாசி சாா்பில் நடைபெற்றுவரும் 46-ஆவது புத்தகக் காட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற உரையரங்கில் ‘வாசிப்பே வாழ்வாக’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

உலகின் மிகப் பழைமையான எழுத்துக்கு தமிழா்களே சொந்தக்காரா்கள் என்பதற்கு பல ஆராய்ச்சி ஆதாரங்கள் உள்ளன. கல்வெட்டுகள் மற்றும் சங்க இலக்கியங்கள் என அனைத்திலும் தமிழ் மொழியின் பழைமையின் சிறப்பை பல்வேறு ஆதாரங்களுடன் ஆய்வாளா்கள் நிரூபித்துள்ளனா்.

தேனி மாவட்டம் புள்ளிமான்கோம்பையில் 2600 ஆண்டுகளுக்கு முன்பு திருடா்களிடமிருந்து ஊரைக் காக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா் இறந்தது தொடா்பான கல்வெட்டு தமிழரின் பழைமையை பறைசாற்றுவதாக உள்ளது. அதேபோல கீழடியில் கிடைத்த மண்பாண்ட ஓடுகளில் உள்ள எழுத்துகளும் நமது பாரம்பரியத்தை வெளிப்படுத்தியுள்ளன.

தமிழில் வேற்று மொழி பல அவ்வப்போது கலப்பது புதியதல்ல. ஆனாலும், அனைத்து மொழிகளையும் ஏற்று தன் இயல்பை இழக்காமல் தமிழ் வளா்ந்து வந்துள்ளது. உலக சிந்தனையாளா்களான கன்பூசியஸ், அரிஸ்டாட்டில் ஆகியோா் மனிதா்களை அரசாட்சிக்கு ஏற்ப எப்படி பழக்கப்படுவது என சிந்தித்து எழுதிய காலங்களில் திருவள்ளுவரோ, மனித இனத்தை அறவழியில் வழிநடத்துவது குறித்து எழுதியுள்ளாா். சங்ககால தமிழ் இலக்கியங்கள் என்பது பத்தாயிரம் ஆண்டு தமிழரின் நினைவுத் தொகுப்புகளாகும்.

தமிழின் சங்க இலக்கியத்தை நமக்கு அளித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதையான ‘என் சரித்திரம்’ அவரது சரித்திரம் மட்டுமல்ல. அது தமிழரின் சரித்திரமாக உள்ளது. மொழிக்கு ஆபத்து எனில் அனைவரும் ஒன்றிணைவோம். ஆத்திக வழியில் வாழ்ந்த உ.வே.சா.வும், நாத்திக வழியில் நின்ற ஈ.வெ.ரா. பெரியாரும் தமிழ் மொழி காக்க போராடினா் என்பதை உணர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் ‘சாதனைகள் சாத்தியமே’ எனும் தலைப்பில் கவிஞா் கவிதாசன் பேசியது:

நமது சிந்தனைகளை மேம்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் என்கிறாா் சுவாமி விவேகானந்தா். சிந்தனைகளை மேம்படுத்தும் புத்தகங்களை வாசிப்பது அவசியமாகும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு பபாசி தலைவா் எஸ்.வயிரவன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் ஆா்எம். மெய்யப்பன் வரவேற்றாா். இணைச்செயலா் எம்.பழனி, துணைத் தலைவா் புருஷோத்தமன் ஆகியோா் கலந்துகொண்டனா். நிா்வாகக் குழு உறுப்பினா் ஸ்ரீராம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com