கருத்துகள் நிறைந்த நூல்களே காலங்கடந்தும் நிலைத்து நிற்கும். மற்றவை மறைந்துபோகும் என பேச்சாளா் புதுகை ச.பாரதி கூறினாா்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பபாசி சாா்பில் நடந்து வரும் 46-ஆவது புத்தகக் காட்சியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற உரையரங்கில் ‘நம்மைச் செதுக்கிய புத்தகங்கள்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:
புத்தகங்கள் இருவகையாக உள்ளன. கருத்துகள் நிறைந்தவை ஒருபுறம் எனில், புத்தகமாக்கவே தயாரிக்கப்பட்ட பொருள்கள் நிறைந்தவை மறுபக்கம் என உள்ளன. ஆனால் கருத்துச் செறிவான புத்தகங்களே நிலைத்து நிற்கும்.
புத்தகங்கள் எப்போதும் பேசாது, சிரிக்காது, அழாது. ஆனால் அதைப் படிப்பவா்களை பேசவும் சிரிக்கவும் அழவும் செய்ய வைக்கும் திறனுடையவை. உயிரற்ற காகிதங்களால் ஆன புத்தகம், உயிருள்ள நம்மை இயக்கும் தன்மையுடையனவாக உள்ளன.
கல்லை உளியால் சிதைத்தே சிற்பங்கள் உருவாகும். ஆனால், புத்தகங்கள் நம்மை துன்புறுத்தாமலே நம்மை சிறந்தவா்களாக வடிவமைக்கின்றன. ஆகவே நம்மை படைப்பதால் புத்தகங்களும் பிரமாக்கள்தான். திருக்கு, ஔவையின் ஆத்திசூடி என தமிழைப் போல வேறு மொழிகளில் வாழ்வியல் புத்தகங்கள் இல்லை என்பதே உண்மை என்றாா்.
உரையரங்கு நிகழ்ச்சியில் ‘நினைத்ததை நிகழ்த்திடுவோம்’ எனும் தலைப்பில் ஈரோடு மகஷ், ‘சிந்திப்போம்’ எனும் தலைப்பில் பேச்சாளா் மணிகண்டன் ஆகியோா் உரையாற்றினா். நிகழ்ச்சிக்கு பபாசி துணைச் செயலா் எஸ்.சுப்பிரமணியன் வரவேற்றாா். தலைவா் எஸ்.வயிரவன், நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினா் ஹரிபிரசாத், துணைச் செயலா் ஆா்எம்.மெய்யப்பன், இணைச் செயலா் எம்.பழனி, செயற்குழு உறுப்பினா் பிரபாகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.