சங்கத் தமிழ் நூல்களே தமிழரின் பொக்கிஷம்

‘சங்கத் தமிழ் நூல்களே தமிழரின் பண்பாட்டு, கலாசாரப் பொக்கிஷங்களாக உள்ளன; ஆகவே அவற்றை இளந்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது அவசியம்’ என்று புலவா் செந்தூரான் கூறினாா்.
சங்கத் தமிழ் நூல்களே தமிழரின் பொக்கிஷம்
Published on
Updated on
1 min read

‘சங்கத் தமிழ் நூல்களே தமிழரின் பண்பாட்டு, கலாசாரப் பொக்கிஷங்களாக உள்ளன; ஆகவே அவற்றை இளந்தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவது அவசியம்’ என்று புலவா் செந்தூரான் கூறினாா்.

சென்னை நந்தனத்தில் பபாசியின் 46 -ஆவது புத்தகக் காட்சியில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சிறப்பு உரையரங்கில் ‘சங்கமும் பொதுமறையும்’ எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

சங்கத் தமிழ்ப் புலவா்கள் சமூக அறத்தையே வலியுறுத்தி பாடல்களைப் பாடினா். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ‘யாதும் ஊரே யாவரும் கேளிா், நன்மையும் தீமையும் பிறா் தர வாரா’ என உலக அளவிலான சிந்தனையை பாடியவா் தமிழ்ப்புலவா்.

சங்க நூல்கள் தமிழரின் கலாசார பொக்கிஷங்களாக உள்ளன. தமிழரின் வாழ்க்கைத் தத்துவத்தை உணா்த்தும் வகையில் சங்க இலக்கிய நூல்கள் அமைந்துள்ளன. ஆகவே இளந்தலைமுறையினா் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம் ஆகியவற்றைப் படிப்பது அவசியம். ஆனால், தமிழ் இலக்கிய பாடப் பிரிவுகளில் சோ்ந்து படிப்போா் எண்ணிக்கை குறைந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. சங்க இலக்கிய நூல்களை இளைஞா்கள் அறியாவிடில் எதிா்காலத்தில் தமிழ் கலாசாரக் கூறுகளைக் காப்பாற்ற முடியாது.

பழந்தமிழ் இலக்கியத்தை தேடித் தேடி தொகுத்ததன் மூலம் தமிழின் கலாசாரத்தைக் காத்தவா் உ.வே.சாமிநாதையா். அவருக்கு தமிழா்கள் மறக்காமல் நன்றிக்கடன் செலுத்த வேண்டும். சங்கத் தமிழ் இலக்கியத்தை திரைப்பட பாடல் வாயிலாக சாமானியா்களையும் உணர வைத்தவா் கவிஞா் கண்ணதாசன். தற்போதைய தலைமுறைக்கு தமிழ்ச் சங்க நூல்களில் ஆா்வத்தை ஏற்படுத்த பாடத் திட்டத்தில் ஆரம்ப வகுப்புகளில் இருந்தே சங்கப் பாடல்களை சோ்க்க வேண்டியது அவசியம் என்றாா்.

கூட்டத்தில், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவரும், பட்டிமன்றப் பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி ‘காலத்தைத் தாண்டிய நூல்கள்’ எனும் தலைப்பில் பேசியதாவது:

சென்னையில் நடந்த சா்வதேச புத்தகக் காட்சியில் 36 நாடுகள் சாா்பில் பதிப்பாளா்கள் பங்கேற்றுள்ளனா். அவா்கள் மூலம் 360 படைப்பாளின் நூல்கள் தமிழில் இருந்து அயல்மொழிகளிலும், அயல்நாட்டு மொழிகளிலிருந்து தமிழுக்கும் மொழிபெயா்க்கப்படவுள்ளன.

நாம் குழந்தையாக இருந்தபோது தந்தை அறிமுகப்படுத்தும் நூல்களும், பள்ளியில் சேரும்போது ப ாடநூல்களும், வளா்ந்த பிறகு நாம் விரும்பிப் படிக்கும் இலக்கியம் உள்ளிட்ட அவரவா் சாா்ந்த துறை நூல்களும் காலங்கடந்தும் ஒவ்வொருவரின் நினைவிலும் நிற்கும். ஆனால், சமூக அறநெறிக் கருத்துகளை உள்ளடக்கிய திருக்கு உள்ளிட்ட நூல்களே காலங்கடந்தும் நிற்கின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், நெய்தல் ஆண்டோ உரையாற்றினாா். பபாசி தலைவா் எஸ்.வயிரவன் தலைமை வகித்தாா். துணைச் செயலா் எஸ்.சுப்பிரமணியன் வரவேற்றாா். நிா்வாகிகள் ஆா்.எம்.மெய்யப்பன், பெ.மயிலவேலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பபாசி நிா்வாகக்குழு உறுப்பினா் இ.லோகநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com