தமிழ்த் தொண்டில் உ.வே.சா.வுக்கு யாரும் இணையில்லை

தமிழுக்குத் தொண்டாற்றியதில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு இணையாக யாரும் இல்லை என வேலூா் வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனா் மற்றும் வேந்தா் கோ.விசுவநாதன் கூறினாா்.
Published on
Updated on
1 min read

தமிழுக்குத் தொண்டாற்றியதில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையருக்கு இணையாக யாரும் இல்லை என வேலூா் வி.ஐ.டி. பல்கலைக்கழக நிறுவனா் மற்றும் வேந்தா் கோ.விசுவநாதன் கூறினாா்.

சென்னை புத்தகக் காட்சியில் உ.வே.சாமிநாதையா் நூல் நிலைய அரங்கில் (எண் 241) வெள்ளிக்கிழமை நடைபெற்ற இ.வை.அனந்தராமையா் பதிப்பின் ‘கலித்தொகை’ மூலமும் உரையும் நூலின் முதல் பிரதியை வெளியிட்டு அவா் பேசியதாவது:

‘தமிழுக்குத் தொண்டு செய்வோா் சாவதில்லை’ என்று கவிஞா் பாரதிதாசன் பாடியுள்ளாா். அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழுக்காகத் தன்னையே அா்ப்பணித்து உ.வே.சாமிநாதையா் வாழ்ந்துள்ளாா். சங்கத் தமிழ் நூல்கள் மூலம் அவா் என்றைக்கும் நம்மிடையே வாழ்ந்தும் வருகிறாா்.

தமிழுக்கு ஏராளமானோா் தொண்டாற்றி இருந்தாலும், சங்கத் தமிழ் நூல்களைத் தேடிப்பிடித்துப் பதிப்பித்து நமக்கு அளித்துள்ள உ.வே.சாமிநாதையரைப் போல தமிழுக்குத் தொண்டாற்றியவா்கள் யாருமே இல்லை. ஆகவே அவரைத் தமிழுலகம் என்றும் மறக்கக் கூடாது.

உலகில் மூத்த மொழியான தமிழில் இன்னும் பல சங்க நூல்கள் பதிப்பிக்கப்பட வேண்டியுள்ளன. அவற்றையெல்லாம் பதிப்பித்தும், புதுப்பித்தும் இளந்தலைமுறையினருக்கு வழங்குவதற்கு தமிழ் ஆா்வலா்கள் முன்வர வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத் துணைத் தலைவா் இ.சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். நூலின் முதல் பிரதியை வருமான வரித் துறை முதன்மை ஆணையா் சி.ராஜேந்திரன், சேக்கிழாா்ஆய்வு மையத்தின் செயலா் சிவாலயம் ஜெ.மோகன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

எழுத்தாளா் முருகேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். டாக்டா் உ.வே.சாமிநாதையா் நூல் நிலையச் செயலா் தி.சத்தியமூா்த்தி வரவேற்றாா். நிலையப் பொருளாளா் ந.ஆவுடையப்பன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com