போலி முகநூல் கணக்கு: அணைக்கட்டு எம்எல்ஏ பெயரில் பணமோசடி!

அணைக்கட்டுத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு அவரது நண்பர்களிடம் பணஉதவி கேட்டு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
போலி முகநூல் கணக்கு: அணைக்கட்டு எம்எல்ஏ பெயரில் பணமோசடி!

அணைக்கட்டுத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் பெயரில் போலியாக முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு அவரது நண்பர்களிடம் பணஉதவி கேட்டு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மோசடி செயல் குறித்து எம்எல்ஏ நந்தகுமார் தரப்பில் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் பிரபலமானவர்கள் பெயரில் போலிக் கணக்கு உருவாக்கி மேற்கொள்ளப்படும் மோசடி செயல்கள் அதிகரித்து வருகின்றன. அதன்படி, அரசு உயரதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களின் புகைப்படத்தை எடுத்து போலிக் கணக்கை தொடங்கி அவர்களது நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்படுகிறது. 

அதனை உண்மையான கணக்காக நினைத்து நட்பு அழைப்பை ஏற்றால், சிறிது நேரத்தில் அவசரத் தேவைகளுக்காக பணம் தேவைப்படுகிறது என குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. 

ஒரே நேரத்தில் பலருக்கும் இதேபோல் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. சிலர் நேரடியாக கேட்க தயக்கப்பட்டு இப்படி கேட்பதாக எண்ணி, பணத்தை அனுப்பும் சம்பங்களும் நடைபெறுகின்றன. 

அதேசமயம் இது போலி கணக்கு என்பதை கண்டறிந்து கேள்வி கேட்டால், அந்தக் கணக்கு முடக்கப்படுகிறது. அவ்வாறான மோசடி செயல்கள் தொடர்ந்து வருகிறது.
 அதன்படி, வேலூர் மாவட்ட திமுக செயலரும், அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி நந்தகுமார் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு அவரது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் இணையும்படி அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அவர்களிடம் பணம் உதவி கோரப்பட்டதாகவும் தெரிகிறது. 

இதனைக் கண்ட சிலர் எம்எல்ஏ நந்தகுமாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ நந்தகுமார், இதுதொடர்பாக தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், நந்தகுமார் எம்எல்ஏ என்ற பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். 

இதுபோன்று வரும் தகவலை கண்டு யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் எம்எல்ஏ நந்தகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com