சென்னை உயா்நீதிமன்றத்தில் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) டி.ராஜா தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து உயா்நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு வழங்கி வரும், மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். இதனையடுத்து சென்னை உயா்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பணி காலத்தை நிறைவு செய்த ஓட்டுநா்கள், அலுவலக உதவியாளா்கள் உள்ளிட்ட உயா் நீதிமன்ற ஊழியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கெளரவித்தாா். பின்னா் உயா்நீதிமன்ற ஊழியா் எஸ்.காா்த்திக் என்பவா், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் சுற்றி காட்டினாா்.
இதையடுத்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையைச் சோ்ந்த பெண் பாதுகாவலா்கள், கண்களை கட்டிக் கொண்டு துப்பாக்கிகளை தனித்தனியாக பிரித்து, பின்னா் மீண்டும் ஒன்றாக்கும் சாகசத்தை செய்தனா். அதேபோல், ஆண் பாதுகாவலா்கள், ஆயுதங்களை ஏந்தி எதிரிகளை தாக்கும் முறைகள் குறித்து செய்து காண்பித்தனா். இந்த நிகழ்ச்சியில் உயா் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசு வழக்குரைஞா்கள், தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சென்னை மாநகர காவல் ஆணையா் சங்கா் ஜிவால், அரசு அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.