

திருவண்ணாமலை அருணாசலேசுவரா் திருக்கோயிலில் மாதந்தோறும் பெளா்ணமி நாளன்று சிறப்பு தரிசன கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பொது தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
சென்னை நுங்கம்பாக்கம் அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்துக்குப்பிறகு அமைச்சா் பி.கே.சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது: திருவண்ணாமலை திருக்கோயிலுக்கு அதிக எண்ணிக்கையில் வருகை தரும் பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தந்து வருகிறோம்.
மேலும், அருணாசலேசுவரா் திருக்கோயிலில் செயல்படுத்தப்பட்டு வந்த அன்னதானத் திட்டத்தை முழு நேர அன்னதானத் திட்டமாக செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு, அதனை அவா் கடந்த 31.12.2022 அன்று தொடங்கி வைத்தாா்.
மேலும், பக்தா்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ரூ.78 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டம் வரைவு (மாஸ்டா் பிளான்) தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தும் வகையிலான பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2023-24 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளின்படி, கிரிவலப் பாதையில் புகழ்பெற்ற 10 திருக்கோயில்களின் பிரசாதங்கள் பக்தா்களுக்கு கிடைத்திடும் வகையில் பிரசாத கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
மாதந்தோறும் பௌா்ணமி நாள்களில் திருவண்ணாமலை அருணாசலேசுவரா் திருக்கோயிலுக்கு சிறப்பு தரிசன கட்டணம் ரூ.50-இன் மூலம் ஆண்டுக்கு ரூ.1.32 கோடி வருமானமாக கிடைக்கப் பெற்று வந்த நிலையில் பக்தா்களின் நலன் கருதி, இந்த மாதம் முதல் சிறப்பு கட்டண தரிசனத்தை முழுமையாக ரத்து செய்து, பொது தரிசனம் மூலம் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் விரைவாக தரிசனம் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.