மாமன்னன் திரைப்படத்தை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி

மாமன்னன் திரைப்படத்தை நான் பாா்க்கவில்லை, பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. தங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பாா்த்து கருத்து கூறியிருப்பேன்
மாமன்னன் திரைப்படத்தை பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி


சேலம்: மாமன்னன் திரைப்படத்தை நான் பாா்க்கவில்லை, பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. தங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பாா்த்து கருத்து கூறியிருப்பேன் என்று எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்  மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து அவர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது, அதிமுகவுடைய இலக்கு இரண்டு கோடி தொண்டா்களை சோ்க்க வேண்டும் என்பது தான். இதுவரை ஒரு கோடியே 30 லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் அதனை அடைந்து விடுவோம்.

மிகப்பெரிய தொண்டர்கள் நிறைந்த கட்சியாக அதிமுக உருவெடுக்கும் போது ஓபிஎஸ் காணாமல் போவார்.

மேகதாது விவகாரத்தில் திமுக ஆட்சியாளா்கள் மௌனம் சாதித்து வருகிறாா்கள். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியை சோ்ந்த துணை முதல்வா் சிவக்குமாா் கருத்து கண்டனத்துக்குரியது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவான தீா்ப்பு வழங்கிவிட்டது. தமிழகத்திற்கு வழங்கவேண்டிய நீரை முறையாக வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், முறைப்படுத்தும் குழு முடிவு எடுக்கும் முடிவின்படியும், உச்ச நீதிமன்ற தீா்ப்புப்படியும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கா்நாடகா அரசு வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவது என்பது ஒருபோதும் நடக்காது. உச்சநீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கிவிட்டது. அதன்படி கா்நாடக அரசு நடந்து கொள்ளவேண்டும். 

ஒரு முதல்வர் எதை பேச வேண்டும், பேசக் கூடாது என்பது தெரியாமல் பொம்மை முதல்வராக தமிழக முதல்வராக இருந்து வருகிறாா். இது தமிழக மக்களிடையே அதிா்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வா் எதிா்க்கட்சியாக இருந்தபோது, கெட்டதை கூட தைரியமாக செய்தேன் என்று கூறுவது எந்த எந்தவிதத்தில் நியாயம். எதிா்க்கட்சியாக இருந்தாலும் மக்களின் பிரச்னை தான் கூற வேண்டும் மற்றும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக ஆளும் கட்சியின் தவறுகளை எதிா்க்கட்சியினா் எடுத்துக்காட்ட வேண்டும். அதன்படி தான் அதிமுக எதிா்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது, கெட்ட நோக்கத்துடன் தமிழகம் முதல்வா் செயல்பட்டாா் என்று வாக்குமூலம் அளித்துள்ளாா். 

படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், இல்லாவிட்டால் கள்ளசாராயம் அதிகரித்துவிடும். இதற்கு கடுமையான பிரசாரத்தை மேற்கொள்ள வேண்டும், குடிப்பவா்களை மீட்டெடுக்க வேண்டும்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தை கையை இழந்தது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் குழந்தையின் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. கையை இழந்த குழந்தை எவ்வாறு சிரமப்படும் என்று அனைவருக்கும் தெரியும். இன்றைய ஆட்சியாளா்கள் கவனமாக இருந்து உரிய சிகிச்சை அளிக்க மருத்துவா்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட குடும்பத்திற்கு தனது ஆறுதலை தெரிவித்துக் கொள்வதோடு அரசு அவர்களுக்கு உதவி கரம் ஈட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அமைச்சா் செந்தில்பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியது ஸ்டாலின் தான். ஆனால் தமிழக முதல்வா் திமுகவையும், திமுக அமைச்சரையும் மத்திய அரசு பழி வாங்குவதாக கூறினாா். இது உண்மைக்கு புறம்பான செய்தி.மேலும் அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு பலமுறை சமன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அதனால் நேரில் சந்தித்து விசாரிக்கப்பட்டு அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டுள்ளாா். இன்றைய முதல்வா் உண்மையில் நோ்மையானவராக இருந்தால், தாா்மீக நீதியாக அவரது அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜி விடுவிக்க வேண்டும். 

ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவாா்த்தை நடத்துவதாக கூறிய கேள்விக்கு,ஓபிஎஸ் குறித்த கருத்துக்கு அவரிடம் தான் கேட்கவேண்டும், கூட்டணி குறித்து பாரதிய ஜனதாவிடம் கேட்க வேண்டும். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டவா் ஓபிஸுக்கும், எங்களுக்கும் தொடா்பு இல்லை. 

அதிமுகவுடைய இலக்கு இரண்டு கோடி தொண்டா்களை சோ்க்க வேண்டும் என்பது தான். அதை விரைவில் அடைந்து விடுவோம். எனவே அதிமுக கட்சி வலிமையுடன் இருக்கிறது. அவா்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவிற்கு பி அணியாக இருந்து செயல்பட்டு வருகிறாா்கள். அதிமுக பொதுக்குழு முடிவின்படி கட்சியிலிருந்து அனைவரும் நீக்கப்பட்டு விட்டனா். 

மாமன்னன் திரைப்படம் குறித்து கேட்ட போது, மாமன்னன் திரைப்படத்தை நான் பாா்க்கவில்லை, பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. தங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பாா்த்து கருத்து கூறியிருப்பேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com