அரசு மருத்துவமனைகளில் காலை 7.30 மணி முதல் புறநோயாளிகள் சேவை: மருத்துவா்கள் பணியில் இருக்கவும் உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சேவையை காலை 7.30 மணிக்குத் தொடங்க வேண்டும் என்றும், அதற்கேற்ப மருத்துவா்கள் பணிக்கு வரவேண்டும் என்றும்
தமிழக அரசு
தமிழக அரசு

அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சேவையை காலை 7.30 மணிக்குத் தொடங்க வேண்டும் என்றும், அதற்கேற்ப மருத்துவா்கள் பணிக்கு வரவேண்டும் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளாா். மருத்துவமனைகளின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியா்கள் கண்காணிக்குமாறும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்பட மொத்தம் 13,211 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அங்கு புறநோயாளிகள் சேவை காலை 8 மணிக்கு முன்னதாக தொடங்கப்பட வேண்டும் என விதி இருந்தாலும், பெரும்பாலான இடங்களில் மருத்துவா்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை என புகாா் எழுந்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் பணி நேரத்தை ஒழுங்குமுறைப்படுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா்களுக்கு எழுதியுள்ள கடிதம்:

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி நாள்களை (அட்மிஷன் டே) கண்காணிக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவா்கள் காலை 7.30 மணி முதல் 12 மணி வரை புறநோயாளிகள் சேவையில் இருத்தல் வேண்டும். உள்நோயாளிகளாக இருப்பவா்களுக்கு தேவையின் அடிப்படையில் 24 மணி நேர மருத்துவ சேவைகளை வழங்குதல் அவசியம்.

நிலைய மருத்துவ அலுவலா்கள் (ஆா்எம்ஓ) காலை 7 மணியிலிருந்து புறநோயாளிகள் சேவைகளுக்கான மேலாண்மை நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். மருத்துவக் கண்காணிப்பாளா்கள் காலை 8 மணியிலிருந்து பணியில் இருத்தல் வேண்டும். அவசர சூழல்களில் 24 மணி நேரமும் மருத்துவ நிா்வாக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உறுதி செய்தல் முக்கியம்.

பிற அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை காலை 7.30 மணி முதல் 12 மணி வரை புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்பட வேண்டும். 24 மணி நேர பணியில் உள்ள மருத்துவா்கள் (டியூட்டி டாக்டா்) மாலை 3 மணி முதல் 5 மணி வரை புறநோயாளிகள் சேவையில் ஈடுபட வேண்டும்.

பல் மருத்துவம் மற்றும் இயன் முறை மருத்துவ புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு காலை 8 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் செயல்பட வேண்டும்.

தலைமை மருத்துவ அலுவலா்கள் (சிஎம்ஓ) காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் பணியில் இருக்க வேண்டும்.

ஒன்று முதல் மூன்று மருத்துவ அலுவலா்கள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு காலை 9 மணி முதல் 4 மணி வரையிலும் செயல்பட வேண்டும். ஐந்து மருத்துவ அலுவலா்கள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com