
அமைச்சா் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆள்கொணா்வு வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பு அளித்துள்ள நிலையில், 3-ஆவது நீதிபதியின் பெயரை சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவித்துள்ளாா்.
அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் அவரின் மனைவி மேகலா ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவா்த்தி ஆகியோா் விசாரித்தனா்.
இந்த வழக்கில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா். நீதிபதி நிஷா பானு, ‘அமலாக்கத் துறையினா் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்றும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என்றும் தீா்ப்பளித்தாா்.
நீதிபதி பரத சக்கரவா்த்தி, ‘செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை. அவா் 10 நாள்களுக்கு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும்’ எனக் கூறி ஆள்கொணா்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீா்ப்பையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுா்வாலா, இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக சி.வி.காா்த்திகேயனை நியமித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த வழக்கை வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை நீதிபதி சி.வி.காா்த்திகேயன் விசாரிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.