உடைந்த இருக்கைகளும் நொந்த பயணமும்: அரசு போக்குவரத்துக் கழக குளறுபடி!

‘அல்ட்ரா டீலக்ஸ்’ பேருந்துக்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த பயணிகளுக்கு, கிழிந்த இருக்கைகளை கொண்ட சாதாரண பேருந்தை போக்குவரத்துக் கழகம் அனுப்பிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
பேருந்தின் கிழிந்த இருக்கைகள்.
பேருந்தின் கிழிந்த இருக்கைகள்.

‘அல்ட்ரா டீலக்ஸ்’ பேருந்துக்கு ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்த பயணிகளுக்கு, கிழிந்த இருக்கைகளை கொண்ட சாதாரண பேருந்தை போக்குவரத்துக் கழகம் அனுப்பிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயக்கும் நெடுந்தூர பேருந்துகளில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், குளிரூட்டப்பட்ட பேருந்து என பல்வேறு வகையிலான பேருந்துகள் முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதில், டீலக்ஸ் வகை பேருந்து கட்டணத்தைவிட அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் கட்டணம் சற்று அதிகமாக வசூலிக்கப்படுகின்றன.

முன்பு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்பட்டு வந்த பச்சை நிற பேருந்துகளின் இருக்கைகள் கிழிந்து இருப்பதாகவும், பூச்சிகள் வருவதாகவும், அடிக்கடி சாலையில் பழுதாகி நின்றுவிடுவதாகவும் தொடர் புகார்களால் அரசு பேருந்தில் செல்ல மக்கள் தயங்கி வந்தனர்.

சாதாரணப் பேருந்து

இதனால், நெடுந்தூர பயணங்களுக்கான அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகள் முழுவதுமாக புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வெள்ளை நிறத்தில் மாற்றப்பட்டது. முன்பு பச்சை நிறத்தில் இயக்கப்பட்ட நல்ல நிலையில் இருக்கும் பேருந்துகளே தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளன.

இந்நிலையில், ஜூலை 8 சனிக்கிழமை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தில் பயணம் செய்வதற்காக பயணிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துள்ளனர். பிறகு அங்கு மாலை 6.10 மணிக்கு வந்த பேருந்தில் பயணிகள் அனைவரும் ஏறியுள்ளனர். ஆனால் பேருந்தில் ஏறிய அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துக்கான கட்டணத்தை வசூலித்து விட்டு துர்நாற்றம் வீசிய, கிழிந்து போன இருக்கைகள் கொண்ட சாதாரணப் பேருந்தை, அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் அனுப்பியுள்ளது. 

அல்ட்ரா டீலக்ஸ் பேருந்து

மேலும் பேருந்தின் பின்னால் இருக்கையை சரிக்க உதவும் கைப்பிடி உடைந்து நீட்டிக்கொண்டு அபாயகரமாக இருந்திருக்கிறது. இதுகுறித்து நேரக் காப்பாளரிடம் அவர்கள் புகார் செய்தபோது, பச்சை நிற பேருந்தும் அல்ட்ரா டீலக்ஸ்தான் என்று குறிப்பிட்டதுடன், எதுவாக இருந்தாலும் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். பயணச்சீட்டில் பேருந்தின் ஐ.டி. E6263 என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆனால் நிர்வாகம் அனுப்பி வைத்த பேருந்தில் ஐ.டி.TCN C356 என்று இருந்ததாகவும் பயணி ஒருவர் புகார் தெரிவித்தார். 

மேலும் அல்ட்ரா டீலக்ஸ் பேருந்தாக இருந்தால் பேருந்து தடம் எண்ணுடன் UD என குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் போக்குவரத்துக் கழகம் அனுப்பிய பேருந்தில் அவ்வாறு குறிப்பிடாமல் சாதாரண பேருந்தாகவே இருந்தது. இதன்மூலம் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட பேருந்து அல்ட்ரா டீலக்ஸ் இல்லை என்பதை பயணிகள் உறுதி செய்தனர். 

அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துக்கான கட்டணத்தை பெற்றுக் கொண்டு பராமரிக்கப்படாத பழைய பேருந்தில் பயணிகளை பயணிக்கச் செய்த இந்த குளறுபடிக்கு என்ன பதில் சொல்ல போகிறது அரசு போக்குவரத்துக் கழகம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com