தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள்: மா. சுப்பிரமணியன்

6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Updated on
2 min read

சேலம்: திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 104 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  பேசும்போது, பட்டமளிப்பு விழாக்களில் பங்கேற்பது மகிழ்ச்சிக்குரியது. மாநிலத்தில் உள்ள 36 அரசுக் கல்லூரிகளிலும் 2 ஆண்டுகளாக நானே கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி வருகிறேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 36 அரசுக் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் 21, நிகர்நிலை கல்லூரிகள் 13 என மொத்தமாக 71 கல்லூரிகள் உள்ளன. இந்தியாவில் 36 மாநிலங்களில் தமிழ்நாட்டைப் போல ஒன்றரை மடங்கு அதிக பரப்பளவு உள்ள மாநிலங்களை விட இங்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 11 ஆயிரம் மாணவர்கள் மருத்துவக் கல்வி நிறைவு செய்து வெளியே வருகின்றனர். சேலத்தில் 104 பேர் பட்டம் பெறுகிறார்கள்.
 
தற்போது ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்க ரூ,.400 கோடி தேவைப்படுகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி தொடங்க வேண்டும் என்பது கருணாநிதியின் இலக்கு. மத்திய அரசு இப்போது இந்த இலக்கை அறிவித்துள்ளது. இன்னும் 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தேவை என்ற நிலை உள்ளது. முதலமைச்சர் தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார். 6 மாவட்டங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டால் இந்திய அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி உள்ள பெருமையை தமிழகம் அடையும். விரைவில் அந்த கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. திருப்பத்தூர், தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று கூறினார்.

மேலும், 150 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு பிறகு கட்டண வசதி வார்டுகள் சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன.தொடர்ந்து மதுரை மற்றும் கோவையில் கட்டண வசதி வார்டுகள் தொடங்கப்பட்டன. விரைவில் தருமபுரியிலும் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டின் அரசு திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதில் சேலம் மருத்துவனை முன்னோடியாக உள்ளது.
 
தமிழ்நாட்டில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீரிழிவு பாதிப்பால் சிகிச்சை பெற வருபவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பாதிப்பை கண்டறிய முடியும்.1250 இடங்களில் நடைபெற்ற வருமுன் காப்போம் முகாம் வாயிலாக மாநிலம் முழுவதும் 15 லட்சம் பேர் பயனடைந்தனர். இதயம் காப்போம் திட்டத்தின் மூலம் கூட்டு மருந்து பெட்டகம் துணை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருப்பு வைக்கப்படும். மாரடைப்பு அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இந்த மருந்து வழங்கப்படும். இன்னும் 15 நாட்களில் 1025 மருத்துவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகிறது என்றார் அவர்.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com