கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை

கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை

கரூரில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மெஸ் மணியின் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Published on

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில் கடந்த மே மாதம் 26-ம்தேதி  முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது ஆதரவாளர் வீடுகளில் இருந்து ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். 

மேலும் சில இடங்களில் அவரது ஆதரவாளர்களின் வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் சீல் வைத்தனர். இந்நிலையில் அமலாக்குத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 13-ம்தேதி முதல் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் ராமேஸ்வர பட்டியில் உள்ள அவரது வீடு மற்றும்  செந்தில் பாலாஜியின்நெருங்கிய நண்பர் வெங்கமேட்டைச் சேர்ந்த சண்முகம் செட்டியார் என்பவரது வீடு மூன்று  இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் மீண்டும் வருமானவரித்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளரான கொங்குமெஸ் மணி வசிக்கும் கரூர் ராயனூரில் அவரது வீட்டிலும், சின்னாண்டாங்கோவில் பகுதியில் உள்ள கொசுவலை நிறுவனத்திலும் ஆய்வு செய்து வருகின்றனர். வருமான வரித்துறையின் இரண்டாவது முறையாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்துவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com