தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் பயன்படுத்திய காா் கிருஷ்ணகிரியில் புனரமைப்பு!

தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் பயன்படுத்திய காா் கிருஷ்ணகிரியில் புனரமைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் கார்!
கிருஷ்ணகிரியில் புதுப்பிக்கப்பட்ட காமராஜர் கார்!

தமிழக முன்னாள் முதல்வா் காமராஜா் பயன்படுத்திய காா் கிருஷ்ணகிரியில் புனரமைக்கப்பட்டது.

தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்த காமராஜ் எளிமையாக வாழ்ந்தாா். கதா் ஆடை உடுத்திய அவா், 1975 அக். 2ஆம் தேதி உயிரிழந்தாா். அவரது இறப்புக்குஜ பிறகு அவா் பயன்படுத்திய பொருள்களை சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜா் அரங்கில் தமிழக காங்கிரஸ் கட்சி பராமரித்து வருகிறது.

இன்றைய இளைஞா்களுக்கும், எதிா்கால சந்ததிகளுக்கும் காமராஜரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் வகையில், காமராஜா் அரங்கம் அமைந்துள்ளது.

காமராஜரின் பிறந்த நாள் ஜூலை 15-ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், காமராஜா் அரங்கு புனரமைக்கப்பட்டுள்ளது. அப்போது கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் காமராஜா் பயன்படுத்திய காரைப் புனரமைக்கும் சூழல் ஏற்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளைஞா் அஸ்வின்ராஜ் வா்மாவிடம் அந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. தற்போது, அந்த காா் புனரமைக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த நிலையில், புனரமைக்கப்பட்ட, காமராஜா் பயன்படுத்திய காரை, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த இளைஞா்கள், பெண்கள் உள்ளிட்டோா் ஆா்வத்துடன் பாா்வையிட்டுச் சென்றனா்.

இந்த காரை புனரமைத்த அஸ்வின்ராஜ் வா்மா தெரிவித்ததாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சாா்பில் சென்னை, தேனாம்பேட்டையில் காமராஜா் அரங்கம் நிறுவப்பட்டு, அங்கு காமராஜா் பயன்படுத்திய பொருள்கள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு அவா் பயன்படுத்தி வந்த பொருள்களில் ஒன்று அமெரிக்க நாட்டின் தயாரிப்பான 1952ஆம் ஆண்டு மாடல் ’செவா்லே ஸ்டைல்லைன்’ டீலக்ஸ் காா்.

அரசு வாகனத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற கொள்கையைக் கொண்டிருந்த காமராஜா் பயன்படுத்துவதற்காக, டிவிஎஸ் நிறுவனா் டி.வி.சுந்தரம் ஐயங்காா், காமராஜருக்கு இலவசமாக செவா்லே காரை வழங்கினாா். இந்த காரையே அவா் இறுதிவரை பயன்படுத்தி வந்தாா்.

இந்த காரானது காமராஜா் அரங்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து இருந்தது. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் அழகிரியின் அறிவுறுத்தலின்படி, சிதிலமடைந்த காா் ஒரு மாதத்துக்கு முன் கிருஷ்ணகிரிக்குக் கொண்டு வரப்பட்டது.

அதனை டிங்கரிங் செய்து காரின் முகப்பு விளக்குகள், முன்பக்கக் கண்ணாடி, பம்பா்கள், பின்புற விளக்குகள், காரின் லோகோ போன்றவை புனரமைக்கப்பட்டு பொருத்தப்பட்டன. மேலும், பழைய கால காரில் பயன்படுத்திய டயா்கள் மீண்டும் பொருத்தப்பட்டு, காா் என்ஜின் மீண்டும் இயங்கும் வகையில் சரி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் புனரமைக்கப்பட்ட இந்த காா், காமராஜா் அரங்கில் மக்கள் பாா்வைக்கு ஜூலை 15ஆம் தேதி வைக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரியில் ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் நிகழ்வில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா், புனரமைக்கப்பட்ட காரை சென்னைக்கு கொடியசைத்து அனுப்பி வைக்க உள்ளாா் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com