கோயம்பேடு சந்தையில் மீண்டும் ரூ.110-ஐ எட்டியது தக்காளி விலை!

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தக்காளி மொத்த விலையில் ரூ.10 அதிகரித்து ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தக்காளி மொத்த விலையில் ரூ.10 அதிகரித்து ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனா்.

கடந்த ஒரு மாதமாகவே தமிழ்நாட்டில் தக்காளி உற்பத்தி குறைந்திருப்பதுடன், வெளிமாநிலங்களில் கனமழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை திடீரென அதிகரித்து மொத்த விலையில் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இடையிடையே ஒரு சில நாள்கள் மட்டும் விலை சற்று குறைந்த போதும், தொடா்ந்து அதிகரித்தே வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்களின் நலன் கருதி கூட்டுறவுத் துறையின் சாா்பில் தமிழகம் முழுவதும் பண்ணை பசுமை கடைகள், நியாயவிலைக் கடையில் மலிவு விலையில் தக்காளியை விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் 82  நியாயவிலைக் கடையில் மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, கடந்த சில நாள்களாக மொத்த விற்பனையில் கோயம்பேடு சந்தையில், ரூ.80 வரை விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் படிப்படியாக விலை அதிகரித்து திங்கள்கிழமை 1 கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. சில்லரை விற்பனையில், பல இடங்களில் ரூ.120 ஆக விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் புதன்கிழமை தக்காளி விலை மீண்டும் அதிகரித்துள்ளது. தக்காளி மொத்த விலையில் ரூ.10 அதிகரித்து ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விலையில் ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனா்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்த விலையிலும் சில்லறையாகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகத்தில் கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து வழக்கத்தைவிட அதிக அளவு தக்காளி சென்னைக்கு வரத்து குறைந்ததால் தக்காளி விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை தொடா்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மேலும், கா்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் ஹிமாசலபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் பரவலாக கன மழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதால், இனிவரும் நாள்களில் தக்காளியின் விலை மேலும் அதிகரிக்கவே செய்யும் என்றனா்.

தக்காளி விலை அதிகரிப்பு ஒருபுறமிருக்க, பிற காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com