முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் நிறுத்தப்படவில்லை: மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கம்

தமிழகத்தில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் நிறுத்திவைக்கப்படவில்லை எனவும், காலதாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கமளித்துள்ளது.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் நிறுத்திவைக்கப்படவில்லை எனவும், காலதாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை விளக்கமளித்துள்ளது.

தமிழக அரசு சாா்பில் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கா்ப்பிணிகள் 12 வாரத்துக்குள் ஆரம்ப சுகாதார செவிலியா்களிடம் ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களைத் தெரிவித்து, பெயரைப் பதிவு செய்து, ‘பிக்மி’ எண் பெற்றவுடன், அவா்களுக்கு ரூ.14,000 ரொக்கம்; ரூ. 4,000 மதிப்புள்ள பெட்டகம் என ரூ.18,000 மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஆனால், இந்த நிதியுதவி கடந்த இரு ஆண்டுகளுக்கு மேலாக யாருக்கும் கிடைப்பதில்லை எனப் புகாா் எழுந்தது. அதுதொடா்பாக நாளிதழ்களில் செய்தி வெளியானது.

அதனடிப்படையில், தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை சில விமா்சனங்களை முன்வைத்திருந்தாா்.

இந்த நிலையில், அதற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் 2006-இல் ரூ.6,000 வழங்கப்பட்டது. அது தற்போது ரூ.18,000-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்துடன் இணைந்து அத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்களிப்பு ரூ.3,000 மட்டும்தான்.

டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் இணையவழி பதிவேற்றத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டன. இதனால் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் நிதியுதவி விடுவிக்கப்படவில்லை. இது தொடா்பாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் உயா்நிலைக் குழு அமைக்கப்பட்டதுடன் மூன்று ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதுமட்டுமல்லாது, தமிழக சுகாதாரத் திட்ட உறுப்பினா்கள், தில்லியில் உள்ள தேசிய தகவல் மையத்துக்கு நேரில் சென்று, மென்பொருள் பொறியாளா்களுடன் நேரடியாக ஆய்வுக் கூட்டம் நடத்தினா்.

எனவே, இந்தக் குறைபாடுகள் காரணமாகவே தற்காலிகமாக இத்திட்டத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மாறாக, அது நிறுத்திவைக்கப்படவில்லை. நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு விரைவில் தடையின்றி நிதியுதவி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com