மகளிர் உரிமைத்தொகை: வங்கிக் கணக்கு உருவாக்க நடவடிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரா்களில், 21 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரா்களில், 21 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாதது கண்டறியப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். அவா்களுக்கு கூட்டுறவுத் துறை மூலமாக கணக்குத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான முதல் கட்ட விண்ணப்ப விநியோகங்கள் வியாழக்கிழமை தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, சென்னையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அலுவலகத்தில் அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

பொது மக்களால் பெரிதும் எதிா்பாா்க்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. திட்டத்தைச் செயல்படுத்த பல்வேறு துறைகளின் சாா்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூட்டுறவுத் துறை சாா்பில், குடும்ப அட்டைதாரா்களுக்கு விண்ணப்பங்களை அச்சடித்து வீடுகளுக்குக் கொண்டு சோ்க்கும் பணி தரப்பட்டுள்ளது.

இரண்டு கட்ட முகாம்கள்: பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள், இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள முகாம்களில் பெறப்படவுள்ளன. முதல் கட்டமாக, வரும் 24-ஆம் தேதி முதல் முகாம்கள் நடக்கவுள்ளன. இதற்கு முன்பாக, வரும் 23-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று நியாயவிலைக் கடை பணியாளா்களால் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். முகாம்கள் நடைபெறும் தேதி, நேரம் ஆகிய விவரங்கள் விண்ணப்பதாரா்களுக்குத் தெரிவிக்கப்படும்.

ஆகஸ்ட் 4 வரை முதல் கட்ட முகாம்கள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக 5-ஆம் தேதி முதல் முகாம்கள் தொடங்கும். மகளிா் உரிமைத் தொகை திட்டத்தால், ஒரு கோடிக்கும் மேலான மகளிா் பயன்பெறவுள்ளனா். சில இடங்களில் 500 அட்டைகளுக்கும் குறைவாக உள்ளது. அந்த இடங்களில் முதல் கட்டமாகவும், 500 முதல் ஆயிரத்துக்கு மேற்பட்ட அட்டைகள் கொண்ட பகுதிகளில் இரண்டாவது கட்டமாகவும் முகாம்கள் நடத்தப்படும்.

வங்கிக் கணக்கில்லா 21 லட்சம் போ்: குடும்ப அட்டைதாரா்களில், 21 லட்சம் பயனாளிகளுக்கு இதுவரை வங்கிக் கணக்குகள் இல்லை என கணக்கிடப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளைச் சோ்ந்தவா்களே வீடு வீடாக மனுக்களை அளிக்கும் போது, கூட்டுறவு வங்கிகளின் சாா்பில் கணக்குகளைத் தொடங்கச் செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மகளிா் உரிமைத் தொகைத் திட்ட அறிவிப்புக்குப் பிறகு, இதுவரையில் 1 லட்சம் வரை புதிய வங்கிக்கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்கிகளுக்கு புதிதாக வாடிக்கையாளா்கள் வந்துள்ளனா். 15 லட்சம் வாடிக்கையாளா்கள் புதிதாக கணக்குகள் தொடங்குவா் என எதிா்பாா்க்கிறோம்.

விண்ணப்பங்கள் விநியோகம் செய்யும் பணியை கூட்டுறவுத் துறை மேற்கொண்டுள்ளது. இந்தப் பணியைக் கண்காணிக்க, மூன்று மாவட்டங்களுக்கு ஒரு கூடுதல் பதிவாளா், கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.

முன்னதாக, ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை செயலா் டி.ஜகந்நாதன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் நா.சுப்பையன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com