தூத்துக்குடி பனிமய மாதா பேராலய தங்கத்தேரை அலங்கரிக்கவுள்ள 9000 அமெரிக்க வைர கற்கள்!

பனிமய மாத பேராலய தங்கத்தேர் அலங்காரத்தில் 9,000 அமெரிக்க வைர கற்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருவதாக பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான குமார் ராஜா சனிக்கிழமை தெரிவித்தார்.
புனித பனிமய மாதா பேராலய தங்கத்தேர் (கோப்புப்படம்).
புனித பனிமய மாதா பேராலய தங்கத்தேர் (கோப்புப்படம்).

தூத்துக்குடி: தூத்துக்குடியில் புனித பனிமய மாத பேராலய தங்கத்தேர் அலங்காரத்தில் 9,000 அமெரிக்க வைர கற்கள் பதிக்கப்பட்டு அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருவதாக பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான குமார் ராஜா சனிக்கிழமை தெரிவித்தார்.

தூத்துக்குடியில் உலக புகழ் பெற்ற புனித பனிமய மாதா பேராலயத்தின் தங்கத் தேர் திருவிழா வரும் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழாவின் சிகர நிகழ்வான தங்கத்தேர் பவனி வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து சுமார் 216 ஆண்டுகள் பழைமையான தேர் புதுப்பித்து, அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில், இந்த தங்கத் தேர் திருவிழா தொடங்குவதற்கு சில தினங்களே உள்ளதால், இது குறித்து பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான குமார் ராஜா சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற புனித பனிமயமாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்த பேராலயத்தின் 441ஆம் ஆண்டு திருவிழா மற்றும் 16 ஆவது தங்கத் தேர் திருவிழா வருகிற 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடந்து வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தங்க தேர் பவனி நடைபெற உள்ளது. இதில், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயர்கள், பங்கு தந்தையர் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்துகின்றனர். 

இந்த விழாவில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
 
இத்திருவிழாவின் முக்கிய திருவிழாவான தங்கத்தேர் பவனி திருவிழா வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர் பவனி திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகின்றனர். பின்னர் தங்கத்தேர் பவனியை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் ஜெபம் செய்து தொடங்கி வைக்கிறார்.

ஜெபமாலையில் உள்ள 53 மணிகளை அடிப்படையாகக் கொண்டு, இத்தேர் 53 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது, இத்தேர் ரூ. 1.5 கோடி மதிப்பீட்டில், புதுப்பித்து அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பழமையான தேர் என்பதால் 80 சதவீதம் வரை புதிதாக கேரளா மாநிலத்தில் இருந்து தேக்கு மரத்தடிகள் வரவழைக்கப்பட்டு, அதன்மூலம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, ஜப்பான் நாட்டிலிருந்து வர அழைக்கப்பட்ட தங்க தாள்கள், அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட 9,000 வைரக்கற்கள் ஆகியவை கொண்டு தங்கத்தேர் அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

மேலும், இத்திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார். 

இந்த சந்திப்பின்போது, பேராலய பங்கு பேரவை கமிட்டி துணைத்தலைவர் ஹாட்லி, பொருளாளர் ஜாய் ரோச், செயலர் கென்னடி, இணைச்செயலர் நேவிஸ் அம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com