
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சனிக்கிழமை ஆடிப்பூரத் தேரோட்டம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயில் 108 திவ்யதேசங்களில் முக்கியமான திருத்தலம். ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள் அவதரித்த சிறப்புக்குரியது.
இங்கு ஆண்டுதோறும் பெரியாழ்வாரின் அவதார நாளான ஆனி சுவாதியன்று செப்புத் தேரோட்டமும், ஆண்டாளின் அவதரித்த நாளான ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் ஆடிப்பூரத் தேரோட்டமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பிரசித்தி பெற்ற ஆடிப்பூரத் திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிப்பூர திருவிழாவில் முதல் நாள் இரவு 16 வண்டி சப்பரமும், பெரியாழ்வாா் மங்களாசாசனம், 5 கருட சேவை என தினசரி பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றன. 5 ஆம் நாள் விழாவில் பெரிய பெருமாள், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள், காட்டழகர் கோயில் சுந்தரராஜ பெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் ஆகியோருக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்யும் உற்சவம் நடைபெற்றது. அன்று இரவு நடந்த கருட சேவையில் பெரிய பெருமாள், ரெங்கமன்னார், திருத்தங்கல் அப்பன், ஸ்ரீனிவாச பெருமாள், சுந்தரராஜபெருமாள் ஆகியோர் தனிதனியாக கருட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவிழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான 7 ஆம் நாள் விழாவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோயிலில் ஸ்ரீ ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவை உற்சவம் வியாழக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.
‘கோவிந்தா’ ‘கோபாலா’ என கோஷம் முழங்கியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான 9 ஆம் நாள் திருவிழாவான ஆடிப்பூரத் தேரோட்டத்தில் ஸ்ரீஆண்டாளுக்கு சாற்றுவதற்காக மதுரை அழகர் கோயில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு சாற்றிய பட்டு வஸ்திரம், பூமாலை உள்ளிட்ட மங்கள பொருட்கள் வெள்ளிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரபட்டது.
அங்கு ஸ்ரீரங்கம் மற்றும் அழகர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம், பூமாலை சாற்றப்பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
சனிக்கிழமை அதிகாலை ஏகாந்த திருமஞ்சனம் முடிந்து ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருஆடிப்பூரத் தேரில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சனிக்கிழமை 8.5 மணிக்கு ஆடிப்பூரத் தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.
இதையடுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், எஸ்.பி. சீனிவாச பெருமாள், போக்சோ நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, எம்எல்ஏக்கள் சீனிவாசன், மான்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி மான்ராஜ், நகராட்சி தலைவர் தங்கம் ரவிகண்ணன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ‘கோவிந்தா’ ‘கோபாலா’ என கோஷம் முழங்கியபடி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பக்தர்களின் வசதிக்காக 5 சிறப்பு மருத்துவ முகாம்கள், 100 சிறப்பு பேருந்துகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர். தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. டி.ஐ.ஜி பொன்னி, எஸ்.பி ஸ்ரீனிவாச பெருமாள் தலைமையில் சுமார் 1500க்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் முத்துராஜா, தக்காா் ரவிச்சந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.